அமித்ஷாவுக்கு பதில் பியூஷ் கோயல், ராமதாஸ் சந்திப்பு:  அதிமுகவின் மக்களவை தேர்தல் கூட்டணி இதுதான்?

 

அமித்ஷாவுக்கு பதில் பியூஷ் கோயல், ராமதாஸ் சந்திப்பு:  அதிமுகவின் மக்களவை தேர்தல் கூட்டணி இதுதான்?

சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டு பியூஷ் கோயல் சென்னை வரவுள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமைய இருப்பதாக கூறப்படுகிறது. அதனை உறுதி செய்ய சென்னை வரும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதன்பின்னர் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளனர்.

சென்னை அடையாறில் உள்ள க்ரவுன் பிளாசா ஹோட்டலில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. இதற்காக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அடையாறு விரைந்துள்ளனர். அதிமுக – பாமக கூட்டணி உறுதி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல் 12.15 மணியளவில் சென்னை வரவுள்ள பாஜக அமைச்சர் பியூஷ் கோயல், மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். தற்போதைய நிலையில், பாஜக, அதிமுக மற்றும் பாமக ஆகியோரின் கூட்டணி இன்று உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.