அப்துல்கலாம் விருது பெயரை மாற்றிய ஜெகன் மோகன் ரெட்டி! கழுவி ஊற்றிய எதிர்க்கட்சிகள்

 

அப்துல்கலாம் விருது பெயரை மாற்றிய ஜெகன் மோகன் ரெட்டி! கழுவி ஊற்றிய எதிர்க்கட்சிகள்

ஆந்திராவில் அப்துல்கலாம் பெயரில் வழங்கும் விருது பெயரை மாற்றியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அறிக்கை வெளியான 24 மணி நேரத்துக்குள் அந்த உத்தரவை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திரும்ப பெற்றார்.

ஆந்திராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு அம்மாநில அரசு சார்பாக ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிரதிபா வித்யா புராஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும் அப்துல்கலாமின் பிறந்தநாளான நவம்பர் 11ம் தேதியன்று இந்த விருதுகள் வழங்கப்படும். அந்த விருதுடன் மாணவர்களுக்கு தகுதி சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு மற்றும் உயர் கல்விக்கான உதவி தொகையை ஆந்திர அரசு வழங்கும்.

கலாம், ஒய்.எஸ்.ஆர்.

இந்நிலையில், ஆந்திர கல்வி துறை கடந்த திங்கட்கிழமையன்று ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிரதிபா வித்யா புராஸ்கர் விருது இனி ஓய்.எஸ்.ஆர். வித்யா புராஸ்கர் விருது என அழைக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஓய்.எஸ்.ஆர். என்பது முன்னாள் முதல்வரும், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பா ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை குறிக்கும். விருது பெயர் மாற்றத்துக்கு பல்வேறு தரப்பினரும் உடனடியாக கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். 

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டாக்டர் கலாம் தனது எழுச்சியூட்டும் வாழ்க்கையால் தேசத்துக்காக நிறைய சாதித்தார். ஜெகன் ரெட்டியின் அரசாங்கம் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிரதிபா வித்யா புராஸ்கர் விருதை ஓய்.எஸ்.ஆர். வித்யா புராஸ்கர் விருது என மாற்றுவது சுய அதிகாரத்தில் மரியாதைக்குரிய மனிதரை அவமதிக்கும் முறையாகும் என தெரிவித்து இருந்தார்.

சந்திரபாபு நாயுடு

பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சனம் செய்ததால், மாநில கல்வி துறை அறிக்கை வெளியான 24 மணி நேரத்துக்குள் விருது பெயர் மாற்றத்தை ஜெகன் மோகன் ரெட்டி திரும்ப பெற்றார். மேலும், இது போன்ற விருதுகள் அம்பேத்கர், டாக்டர் கலாம் மற்றும் காந்தி ஆகியோரின் பெயரில்தான் வழங்க வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.