அபிநந்தன் இயக்கி சென்ற பறக்கும் சவப்பெட்டி ‘மிக் 21’ ரக போர் விமானம்!?

 

அபிநந்தன் இயக்கி சென்ற பறக்கும் சவப்பெட்டி ‘மிக் 21’ ரக போர் விமானம்!?

பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ள இந்திய விமானி அபிநந்தன் இயக்கிய மிக் 21 ரக போர் விமானம் பயிற்சியின் போதே பல விமானிகளின் உயிரை காவு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சென்னை: பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ள இந்திய விமானி அபிநந்தன் இயக்கிய மிக் 21 ரக போர் விமானம் பயிற்சியின் போதே பல விமானிகளின் உயிரை காவு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பிலும் தொடர்ந்து ஆயுத பிரயோகங்கள் நடைபெற்று வருகின்றன. எல்லை புறங்களில் விமானப்படை தாக்குதல்கள் இரு தரப்பிலும் நடைபெற்று வருவதால் பதற்றம் நீடித்து வருகிறது.

iaf jet

இன்று காலை அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் விமானத்தை வீழ்த்தியதாக இந்திய ராணுவம் அறிவித்தது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவின் இரண்டு போர் விமானங்களை வீழ்த்தியுள்ளோம், இரண்டு விமானிகளை கைது செய்துள்ளோம். அதில் ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அறிவித்து விமானி ஒருவரின் வீடியோவையும் வெளியிட்டது.

இதையடுத்து, இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்துக்கு ‘மிக்’ ரக விமானம் மூலம் பதிலடி கொடுத்த இந்திய விமானி ஒருவர் திரும்பவில்லை என இந்திய அரசும் உறுதிபடுத்தியுள்ளது. இந்திய விமானப்படையில் மிக் 21 பைசன் ரக விமானத்தை, விமானியுடன் காணவில்லை எனும் தகவலை வெளியுறவுத்துறை செயலளார் உறுதிபடுத்தியுள்ளார்.

abinandhan

முன்னதாக, இரண்டு விமானிகளை சிறை பிடித்துள்ளோம் என தெரிவித்த பாகிஸ்தான் ராணுவம் தற்போது ஒரே ஒரு விமானி மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ளார் என தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படும் இந்திய விமானப்படையின் விமானம் உண்மையாகவே சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது விபத்துக்குள்ளானதா என்ற உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில், பறக்கும் சவப்பெட்டி என்று அழைக்கப்படும் ரஷ்ய தயாரிப்பான மிக் 21 ரக போர் விமானம் பயிற்சியின் போதே பல விமானிகளின் உயிரை காவு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப குறைபாடு என இந்திய விமானப்படையும், இந்திய விமானிகளுக்கு போதிய பயிற்சி இல்லை என ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

அதேசமயம், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தனின் காயங்களை பார்க்கும் பொழுது சுட்டு வீழ்த்தப் பட்ட விமானத்தின் விமானிக்கு ஏற்பட்ட காயங்கள் போல் இல்லை. விமானம் வீழப்போவது தெரிந்து பாராசூட்டில் குதித்த பொழுது ஏற்பட்ட காயங்கள் போல் தான் உள்ளது. உண்மையில் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதா அல்லது தொழில்நுட்பக் கோளாறில் வீழ்ந்ததா என்பது தெரியவில்லை எனவும் சில தகவல்கள் பரவி வருகின்றன.

ஒருவேளை தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீழ்ந்திருந்தால், பிரதமர் தொடங்கி அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் வரை அவர்களின் பாதுகாப்புக்கும், போக்குவரத்துக்கும் என அவர்களுக்காக கோடிக்கணக்கில் செலவிடும் அரசாங்கம், நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக உயிரை பணயம் வைக்கும் வீரர்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஏன் என சமூக ஆர்வலர்கள் தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அத்துடன், இனிமேலும் இது போன்ற அலட்சியங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

என்ன இருந்தாலும், தற்போது பாகிஸ்தான் வசம் உள்ள அபிநந்தன் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்பதும்… போர் அல்ல என்பதுமே அனைவரது எண்ணமாகவும் உள்ளது.