அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடியை வாடிக்கையாளர்களிடமிருந்து கறந்த வங்கிகள்…

 

அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடியை வாடிக்கையாளர்களிடமிருந்து கறந்த வங்கிகள்…

கடந்த 3 ஆண்டுகளில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை என்று வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் மொத்தம் ரூ.10 ஆயிரம் கோடியை அபராதமாக வசூல் செய்துள்ளன.

வங்கிகளில் வழக்கமான சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அந்த கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் வங்கிகள் அபராதம் விதிக்கும். உதாரணமாக, மாநகராட்சிகளில் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் சராசரியாக ரூ.3 ஆயிரம் குறைந்தபட்ச இருப்புதொகையை சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டும். அதேசமயம் நகர்புற வாடிக்கையாளர்கள் என்றால் சேமிப்பு கணக்கில் ரூ.3 ஆயிரமும், நடுத்தர நகரமாக இருந்தால் வாடிக்கையாளர் ரூ.2 ஆயிரமும் சேமிப்பு கணக்கில் மாதந்தோறும் குறைந்தபட்ச இருப்பு தொகையாக பராமரிக்க வேண்டும். அதேசமயம் கிராமப்புற வாடிக்கையாளர் என்றால் சேமிப்பு கணக்கில் ரூ.1,000ம் வைத்திருக்க வேண்டும்.

எச்.டி.எப்.சி. வங்கி

இந்த குறைந்தபட்ச இருப்புதொகை அளவு வங்கிகளை பொறுத்து மாறுபடும். வழக்கமான சேமிப்பு கணக்கில் வங்கிகள் நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச இருப்புதொகையை காட்டிலும் கணக்கில் பணம் குறைவாக இருந்தால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கும். இப்படி கடந்த 3 ஆண்டுகளில் ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்பட 18 பொதுத்துறை வங்கிகளும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி உள்பட 4 தனியார் வங்கிகளும் குறைந்தபட்ச இருப்புதொகையை பராமரிக்காத தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் அபராதமாக வசூல் செய்துள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, ஜன் தன் உள்ளிட்டஅடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகளுக்கு (பி.எஸ்.பி.டி.) வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு தொகை தேவையை நிர்ணயம் செய்யவில்லை. கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி, நம் நாட்டில் மொத்தம் 57.3 கோடி பி.எஸ்.பி.டி. கணக்குகள் உள்ளன. இதில், தன் ஜன் கணக்குகள் மட்டும் 35.27 கோடியாகும்.