அனைத்து வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை 10 சதவீதம் குறையுங்க…. மத்திய அரசுக்கு வாகன துறை கோரிக்கை…

 

அனைத்து வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை 10 சதவீதம் குறையுங்க…. மத்திய அரசுக்கு வாகன துறை கோரிக்கை…

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை வாகனத்துறை மீட்டெடுக்க, அனைத்து பிரிவு வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) கோரிக்கை வைத்துள்ளது.

2019ம் ஆண்டு வாகன துறைக்கு ஒரு இருண்ட காலமாக அமைந்தது. அந்த ஆண்டில் வாகன விற்பனை நிலவரம் ஒரு சில மாதங்களை தவிர பெரும்பாலான மாதங்கள் மோசமாக இருந்தது. புதிய ஆண்டு பிறந்த பிறகாவது விற்பனை சூடுபிடிக்கும் என வாகன தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் 2019ம் ஆண்டைக் காட்டிலும் 2020ம் ஆண்டு வாகனத் துறைக்கு மோசமான ஆண்டாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

டூ வீலர்ஸ்

இந்த ஆண்டில் இதுவரை வாகன வி்ற்பனை நிலவரம் பிரமாதம் என்று சொல்லும் அளவுக்கு இல்லை. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் ரூபத்தில் வாகனத்துறை அடி விழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை முற்றிலும் முடங்கி கிடக்கிறது. லாக்டவுனால் வாகனத்துறை தினந்தோறும் ரூ.2,300 கோடி உற்பத்தி வருவாயை இழப்பதாக சியாம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி.

வாகனத்துறை மீட்டெடுக்க வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்பது உள்பட மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை சியாம் முன்வைத்துள்ளது. இது தொடர்பாக சியாம் தலைவர் ராஜன் வதேரா இது குறித்து கூறுகையில், எதிர்மறையான நுகர்வோர் உணர்வுகள் காரணமாக தேவையை உருவாக்குவது மிகவும் சவாலாக இருக்கும் எனவே மத்திய அரசிடமிருந்து ஊக்குவிப்பு தொகுப்புகளை சியாம் எதிர்பார்க்கிறது. மத்திய அரசு தற்காலிகமாக அனைத்து பிரிவு வாகனங்களுக்கான ஜி.எஸ்டி.யை 10 சதவீதம் குறைக்க வேண்டும், ஜி.எஸ்டி., சாலை வரி மற்றும் வாகன பதிவு கட்டணம் ஆகியவற்றில் 50 சதவீதம் தள்ளுபடி வடிவத்தில் சலுகைகளுடன், ஊக்கம் அடிப்படையிலான வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.