அனைத்து வளங்களையும் அள்ளித் தரும் அஷ்டலட்சுமி வழிபாடு

 

அனைத்து வளங்களையும் அள்ளித் தரும் அஷ்டலட்சுமி  வழிபாடு

தாமரை, வெண்கொடி, அஞ்சல், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை. இவளே திருமகள் என்றும், மகாலட்சுமி என்றும் போற்றப்படுகிறாள்.

மும்பை மக்களின் ஆதர்ஷ கடவுள்களாக சித்தி விநாயகர் கோயிலும், மகாலட்சுமி கோயிலும் இருக்கிறது. காஞ்சி காமகோடி சங்காராச்சாரியார் அவர்களின் விருப்பத்திற்கிணங்க மும்பையில் உள்ள மகாலட்சுமி தாயார் ஆலயத்தை போல சென்னையில் வங்கக் கரையோரம் ஓம்கார வடிவில் நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் தான்  அஷ்டலட்சுமி கோயில். இங்கு தாயாரே மூலவர் என்ற போதிலும், மகாலட்சுமி சமேத மகாவிஷ்ணுவாக திருமண கோலத்தில் உற்சவராக காட்சியளிப்பது கூடுதல் சிறப்பு.

 1ஆதிலட்சுமி:
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்த போது முதன் முதலில் தோன்றிய லட்சுமியே ஆதிலட்சுமி. இவளே இந்த ஆலயத்தின் தரைதளத்தில் இடது காலை மடித்தும், வலது காலை தொங்க விட்டும் பாதத்தின் கீழே கும்பம், சாமரம், கொடி, பேரிகை, கண்ணாடி, விளக்கு, ஸ்வதிகத்துடன் காட்சி அளிக்கிறாள். தாமரை, வெண்கொடி, அஞ்சல், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை. இவளே திருமகள் என்றும், மகாலட்சுமி என்றும் போற்றப்படுகிறாள்.

2.தானியலட்சுமி
வேளாண்மை வளத்தைப் பெருக்கும் வகையில் வளமான தானியங்களை வழங்கும் அம்பிகை. யானையை பீடமாக ஏற்று இடது காலை மடித்தும் வலது காலை தொங்க விட்டும், ஆறு கரங்களில் நெற்கதிர், அபய ஹஸ்தம், வில், கரும்பு, வரத ஹஸ்தம் கொண்டு மேற்கு நோக்கி நமக்கு அருள்பாலிக்கிறாள் தாயார்.

3.தைரிய லட்சுமி
வீரம், வலிமை போன்ற குணங்களைத் தருபவள். துன்பகரமான தருணங்களில் வாழ்க்கையில் துணிவைத் தரும் தாயார். செவ்வாடை தரித்தவள். சங்கு, சக்கர, வில், அம்பு, கத்தி, ஓலைச்சுவடி, கபாலம், வரத ஹஸ்தம் இவற்றை  தாங்கிய எண்கரத்தினள்.  தாமரைப்பூவின் மீது அமர்ந்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.

4.சந்தான லட்சுமி
செல்வத்தில் எல்லாம் சிறந்த செல்வமான குழந்தைப் பேறு அருளும் திருமகள்.
இரண்டு கன்னிப் பெண்கள் சாமரம் வீசியும், கரங்களில் விளக்குடனும் முதல் தளத்தில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறாள் அம்பிகை. கலசங்கள், கத்தி, கேடயம், அபய ஹஸ்தம், வரத ஹஸ்தம்  தரித்து  மடியில் குழந்தை ஒன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.

5.விஜயலட்சுமி
எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தரும் திருமகள் இந்த விஜயலட்சுமி. விஜய எனில் வெற்றி என்று பொருள்பட கைகளில் சங்கு, சக்கரம், பாசம், கத்தி, அபயஹஸ்தம், வரதஹஸ்தம், தாமரை, கேடயம் இவற்றை தன் எட்டுக் கரங்களில் தாங்கி மேற்கு நோக்கி அன்னப் பறவையின் மேல் அமர்ந்திருக்கிறாள் தாயார்.

6.வித்யாலட்சுமி
செல்வத்துள் செல்வமான கல்வி செல்வத்தை அருள்பவள். கல்வியில் புலமையையும், கலைகளில் வல்லமையையும் , மனத்தினில் தெளிவையும்  தருபவள் . குதிரையுடன் சேர்ந்த தாமரை பீடத்தில் வெண்பட்டுடுத்தி சங்கு,பத்ம வரத அபய ஹஸ்தங்களுடன் முதல் தளத்தில் வீற்றிருக்கிறாள்.

7.கஜலட்சுமி
பத்மாசனத்தில் தாமரைகள் தாங்கியவளாக,இரண்டு யானைகள் நீராட்ட நம் வாழ்வின் அனைத்து வளங்களையும் அருள்பவள் இவளே. அரசருக்கு நிகரான செல்வங்களையும், கால்நடைகள் மூலம் வளத்தை அருளாசி புரிகிறார் இந்தத் தாயார்.

8.தனலட்சுமி
இரண்டாவது தளத்தில் கிழக்கு நோக்கி பொன், பொருள், பணம் போன்ற அனைத்தையும் தரவல்ல சங்கு, சக்கரம், கலசம், வில் அம்பு, தாமரை, ஹஸ்தம் ஆகிய ஆகிய ஆறுகரத்துடன் அருள் செய்கிறாள் தாயார்.

சிறப்புகள்

 

  • திருமண வரம் வேண்டுவோர் லட்சுமி சீனிவாசனுக்கு திருக்கல்யாணம் செய்வித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக உள்ளது. 
  • அஷ்டலட்சுமிகளும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் திருமணம் மட்டுமல்ல கல்வி, வீரம், தனம், தான்யம், சந்தானம் அனைத்து வேண்டுதல்களும் கைகூடும் தலமாகத் திகழ்கிறது.
  • ஆதிலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, தைரியலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளைச் சொல்கிறோம். ஏதாவது ஒரு ஆடி வெள்ளிக்கிழமையன்று இந்த அஷ்ட லட்சுமிகளையும் மறக்காமல் துதித்து வந்தால், வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.