அந்த பக்கம் மட்டும் பறக்காதீங்க! இந்திய விமானங்களுக்கு ஆணையம் எச்சரிக்கை!

 

அந்த பக்கம் மட்டும் பறக்காதீங்க! இந்திய விமானங்களுக்கு ஆணையம் எச்சரிக்கை!

ஈரானின் சர்ச்சைக்குரிய வான் பகுதியில் பறப்பதை தவிருங்கள் என்று இந்திய விமான நிறுவனங்களுக்கு இந்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். ஈரானுடான அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக டிரம்ப் கூறிய பிறகு அந்நாடுகளுக்கு இடையிலான விரிசல் மேலும் பெரிதானது. ஈரான் மீது மீண்டும் பல தடைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதனால் ஈரான் கடும் கோபத்தில் உள்ளது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று  ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை அந்நாட்டு வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

 விமானம்

இதனையடுத்து கோபத்தின் உச்சிக்கு சென்ற டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். ஆனால் பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டார். இருப்பினும் ஈரானை தாக்கும் வகையில் படைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் போர்க்கப்பல்களும் ஈரானை தாக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல். இதற்கிடையே அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான எப்.ஏ.ஏ. ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராணுவ நடவடிக்கை மற்றும் அரசியல் பதற்றம் காரணமாக ஈரானின் கடற்பரப்பு பகுதியாக இயக்கப்படும் அமெரிக்க விமானங்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை அந்த பாதையில் பறக்க தடைவிதிக்கப்படுகிறது. மேலும், வர்த்தக விமானங்கள் தாக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எப்.ஏ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது. 

டி.ஜி.சி.ஏ.

இதனையடுத்து இந்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான இந்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.) இந்திய விமான சேவை நிறுவனங்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஈரானின் பாதிப்புக்குரிய வான் பரப்பில் பறக்க வேண்டாம். வேறு பாதையில் விமான சேவையை இயக்குங்கள். அந்த பகுதியில் பதற்றம் குறைந்தபிறகு மீண்டும்  செல்லலாம் என்று இந்திய விமான நிறுவனங்களை டி.ஜி.சி.ஏ. அறிவுறுத்தியுள்ளது.