அந்தரங்கத்தைப் பண்டமாக மாற்றும் நிகழ்ச்சி ‘ பிக் பாஸ்’- ரவிக்குமார் எம்.பி 

 

அந்தரங்கத்தைப் பண்டமாக மாற்றும் நிகழ்ச்சி ‘ பிக் பாஸ்’- ரவிக்குமார் எம்.பி 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரவிக்குமார் எம்.பி. ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவிக்குமார் எம்.பி. ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில், “ விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இரவும் தமிழ்ப் பெருங்குடிமக்களின் நேரத்தைக் கணிசமாக இந்த நிகழ்ச்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஈர்ப்பு கமலிடம் மையம் கொண்டிருக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுடைய அந்தரங்கத்தை நாம் பார்க்கிறோம் என்ற கிளர்ச்சியில் அது மையம் கொண்டிருக்கிறது. ‘ரியாலிட்டி ஷோக்களின்’ வெற்றி அதுதான். 

இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவாவிலிருக்கும் ஃபேப் இண்டியா துணைக்கடையின் ஆடை மாற்றும் அறையில் ரகசிய காமிரா இருப்பதைக் கண்டுபிடித்த செய்தி இந்தியாவில் தனி மனித அந்தரங்கம் என்பது எந்த அளவுக்கு ஆபத்திலிருக்கிறது என்பதை உணர்த்தியது. 

அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அந்தரங்கத்தைப் பாதுகாப்பதில் நாம் போதுமான அக்கறை இல்லாதவர்களாகவே இருக்கிறோம். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பழக்கமில்லாத ஒருவரிடம் எந்த ஊர் என்று கேட்டாலே அவர் அதைக் கூறமாட்டார். ஆனால் இப்போதோ சமூக ஊடகங்களில் தமது அந்தரங்கமான விஷயங்களைப் பதிவிடுவதற்குப் பெரும்பாலோர் தயங்குவதே இல்லை. 

‘ டிஜிட்டல் யுகம்’ அந்தரங்கத்தைப் பண்டமாக சீரழிக்கிறது. அதன் உச்சபட்ச வெளிப்பாடுகளில் ஒன்றுதான் ‘ பிக் பாஸ்’. மக்கள் திரளை எந்த அளவுக்கு வாயுரிஸ்டுகளாக மாற்றுகிறார்களோ அந்த அளவு அந்நிகழ்ச்சித் தயார்ப்பாளர்களுக்கு லாபம். 

bigg boss

இந்த வணிக செயல்பாட்டைக்கூட புறக்கணித்துவிடலாம். ஆனால் இதன் அரசியல் விளைவை நாம் ஒதுக்கிவிடமுடியாது. வாயுரிஸ மனோபாவம் மறு நிலையில் ‘ எக்ஸிபிஷனிஸ’ மனநிலைக்கு இட்டுச்செல்கிறது. ‘ ரியாலிட்டி ஷோக்களால்’ பதப்படுத்தப்பட்ட ஒருவர் தனது அந்தரங்கத்தை அரசாங்கம் கண்காணிப்பதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. அவரே அதற்குத் தன்னை ஒப்புக்கொடுப்பவராக மாறுகிறார். அதுதான் ‘ பாசிஸ ‘ அரசின் வெற்றி. 

டிஜிட்டல் யுகம் என வர்ணிக்கப்படும் இன்றைய காலத்தில் அந்தரங்கம் என்பதற்கு இடம் இருக்கிறதா என்ற கேள்வி நம்முள் எழுகிறது. ‘ முன்னர் பொது வெளியில் ஒரு பெண்ணின் கண்ணியம் குலைக்கப்படுகிறதென்றால் அது தற்காலிகத் தன்மை கொண்டதாக இருந்தது. அதைப் பார்க்கிறவர்களும் குறைவான என்ணிக்கையிலேயே இருப்பார்கள். ஆனால் டிஜிட்டல் தொழில் நுட்பம் அதை உடனடித் தன்மை கொண்டதாகவும் (Instant ) நிரந்தரத் தன்மை கொண்டதாகவும் (Permanent ) மாற்றிவிட்டது. 

இன்று பொது வெளியில் மட்டுமல்ல அந்தரங்கமாக ஒருவருக்குக் கண்ணியக் குலைவு ஏற்பட்டாலும் அடுத்த நொடியே அதை உலகம் முழுவதும் கொண்டு சென்று பரப்புவதை டிஜிட்டல் தொழில் நுட்பம் எளிதாக்கிவிட்டது. இணையம் என்ற பொதுவெளியில் பகிரப்படும் அத்தகைய பிம்பப் பதிவுகள் நீக்கப்படவே முடியாதபடி என்றென்றைக்குமானதாக நிரந்தரத் தன்மைகொண்டதாக இருக்கின்றன.

‘வாயுரிஸம்’ மனிதனை வெறும் உடலாக சுருக்குகிறது. பண்டமாக்கி இழிவுபடுத்துகிறது. வாயுரிஸம் உள்ளிட்ட மன விகாரங்களை அடிப்படையாகக்கொண்டுதான் இன்றைய ‘போர்னோகிராபி’ தொழில் நடக்கிறது. அது, வெறும் ஒழுக்கம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அரசியல் அதிகாரம் சார்ந்தது. 

biggboss

பாசிஸ அரசு குடிமக்களுக்கு அந்தரங்கம் என்பதே இல்லாமல் அழிக்கிறது. அது எவரையும் நம்பாமல் எல்லோரையும் வேவு பார்க்கிறது. ‘வாயுரிஸமும்’அதே அடிப்படையில்தான் இயங்குகிறது.  பாசிஸ மனோபாவத்துக்கு  இயைபுபடுத்தும் காரியத்தை ‘வாயுரிஸம்’ வெற்றிகரமாக சாதிக்கிறது. அரசியல் தளத்தில் பாசிஸத்தை எதிர்க்கும் பலர் கலாச்சார தளத்தில் அதன் செயல்பாடுகளை பிரக்ஞையின்றி வழிமொழிகிறார்கள். மறு உற்பத்திச்செய்கிறார்கள். அதற்கு திரு கமல் அவர்களே நல்ல சான்றாக இருக்கிறார். 

இந்தி மொழி குறித்து திரு அமித் ஷா கூறிய கருத்தைக் கண்டித்து காட்டமான ‘ட்வீட்’ ஒன்றை கமல்ஹாஸன் போட்டார். அதிகாரத்துவ எதிர்ப்பாளர் என நாமெல்லோரும் அவரைப் பாராட்டினோம். ஆனால் அதே கமல்தான் அந்தரங்கத்தைப் பண்டமாக மாற்றும் ‘ பிக் பாஸ்’ நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்தரங்கம் நம் அடிப்படை உரிமை என்பதை உணராதவர்கள் ஒருபோதும் அதிகாரத்துவத்தை எதிர்த்து நிற்கமுடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.