அத்தையை அடிச்சித்தூக்கிய உதயநிதி… மாப்பிள்ளை, மச்சான் கிடா விருந்து வைத்து உதயநிதி தடபுடல் பார்ட்டி..!

 

அத்தையை அடிச்சித்தூக்கிய உதயநிதி… மாப்பிள்ளை, மச்சான் கிடா விருந்து வைத்து உதயநிதி தடபுடல் பார்ட்டி..!

அ.தி.மு.க.வை சட்டமன்ற தேர்தல்களிலெல்லாம் காப்பாற்றும் ஆபத்பாந்தவன் இந்த மண்டலம்தான், ஆனால், அதை குறிவைத்து உதயநிதி இறங்கியிருப்பதுதான் அவர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது.

உதயநிதி  தி.மு.க.வின் மாநில இளைஞரணி செயலாளராக அமர்த்தப்பட்டதும் அதிக எதிர்ப்புகள் தி.மு.க.விலிருந்துதான் சத்தமில்லாமல்  கிளம்பியது. ’விவரம் தெரியாத சின்னப்பையன். சினிமா டிராமான்னு சுத்திட்டிருக்கிற பையனை தளபதி தேவையில்லாம இவ்ளோ பெரிய பொறுப்பில் உட்கார வைக்கிறார்!’ என்று ஒரு அலையை கிளப்பிவிட்டனர்.

ஆனால், அவர்கள் அனைவரது எண்ணங்களையும் தவிடு பொடியாக்கி அரசியலை தட்டி காயப்போட துணிந்துவிட்டார் உதய். அவரை அருகிலிருந்து கவனிக்கும் அதே இளைஞரணியின் மாநில துணை அமைப்பாளரான மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. எப்படி கருணாநிதியால் ஸ்டாலின் தலைமையிலான இளைஞரணி அசந்து போய் பாராட்டப்பட்டதோ அதே நிலை இப்போது உதயநிதியால் திரும்ப இருக்கிறது என்கிறார்.

தி.மு.க. கடும் சோதனையை சந்தித்தபோது இந்த அணிதான் அதிதீவிரமாக உழைத்து, மீண்டும் கட்சியானது ஆட்சியை பிடிக்க உதவியது. அதனால்தான் ‘தி.மு.க.வின் முதுகெழும்பே’ என அந்த அணியை விளித்தார் கருணாநிதி. அப்பேர்பட்ட இளைஞரணியின் மாநில செயலாளராக வெள்ளக்கோவில் சாமிநாதனை நியமித்த ஸ்டாலின் அதிலிருந்து தான் பதவி விலகி கழக பொருளாளர் ஆனார்.

சாமிநாதனோ அப்பதவிக்கு பெருமை தேடித் தரவில்லை என்றாலும் பரவாயில்லை, அந்த பதவியால் தனக்கு பெருமை வருமளவு கூட எதுவும் செய்யவில்லை. இந்த நிலையில்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்து, கழக வெற்றிக்கு தோள் கொடுத்த தனது மகன் உதயநிதியை சமீபத்தில் அவ்வணிக்கு மாநில செயலாளர் ஆக்கினார்.

பதவியேற்றதும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஒரு சம்பிரதாய கூட்டம் போட்டார் உதயநிதி. அப்போது “விரைவில் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கூடுவோம்.” என்றார். இதனை ‘வழக்கமாக பதவிக்கு வருவோர் சொல்லும் வசங்கள் தான் என நினைத்தனர் கட்சியினர். ஆனால் அவர்களெல்லாம் விக்கித்து நிற்கும் வண்ணம், இதோ வரும் 25-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஒரு மெகா விருந்துடன் இளைஞரணியின் ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளார் உதயநிதி.

இந்த நிகழ்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள உதயநிதி “தி.மு.க. இளைஞரணியின் மாவட்டம், மாநகர, மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் வரும் 25-ல் நடைபெறுகிறது.” என்று கூறி அவர்களை அழைத்துள்ளார். தடபுடலான மதிய உணவுடன் இந்த கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் கொங்கு மண்டலம் ஸ்டைல் ‘மாப்பிள்ளை, மச்சான் கிடா விருந்து வழங்கப்பட இருக்கிறது’ என்கிறார்கள்.

அது என்ன மாப்பிள்ளை மச்சான் கிடா விருந்து? அதாவது கொங்குமண்டலம் என்று அழைக்கப்படும் மேற்கு தமிழகத்தில் விவசாயமும், செழிப்பும் அதிகம். அதனால் இளைஞர்களும், நடுத்தர வயது ஆண்களும் பெரிய சாதி, சமுதாயம் பார்க்கமல் மிக ஜாலியாக பழகுவார்கள். அடிக்கடி டூர் போடுவது, ஊருக்கு வெளியே கூடி கும்மாளம் போடுவது என்று இருப்பார்கள். அவர்களுக்குள் சீனியர்களை ஜூனியர்கள் ‘மாமா,மச்சான்’ என்றழைக்க, ஜூனியர்களை சீனியர்களோ ‘மாப்ள’ என்று அழைத்துத்தான் பேசிக்கொள்வார்கள்.

அந்த டீமில் புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்ட பையனில் இருந்து, புது மொபைல் வாங்கிய சீனியர் வரை எதற்கெடுத்தாலும் கிடா வெட்டி பார்ட்டி கொடுப்பது வழக்கம். இதைத்தான் ‘மாப்பிள்ளை, மச்சான் கிடா விருந்து’ என்று சொல்கிறார்கள். முழு ஆட்டை வெட்டி, காரசாரமாக சமைத்து கலகலவென சாப்பிடுவார்கள்.

இப்படியொரு விருந்தைத்தான் உதயநிதி தர இருக்கிறாராம். கொங்கு மண்டலத்தால்தான் கடந்த முறை ஆட்சி அமைக்கும் வாய்ப்பை சின்ன இடைவெளியில் இழந்தது தி.மு.க. அதிலிருந்து கொங்கு மண்டலத்தில்தான் அதிக கவனம் செழுத்தி வருகிறார் ஸ்டாலின். இந்த நிலையில் உதயநிதியும் கொங்கு ஸ்டைலில் இப்படி விருந்தும், ஆலோசனை கூட்டமும் நடத்த இருக்கிறார்.

கொங்கு மண்டல அரசியலை மையமாக வைத்து உதயநிதி களமிறங்கியுள்ளதால் அ.தி.மு.க. தரப்பு அதிர்ந்து கிடக்கிறது. அ.தி.மு.க.வை சட்டமன்ற தேர்தல்களிலெல்லாம் காப்பாற்றும் ஆபத்பாந்தவன் இந்த மண்டலம்தான், ஆனால், அதை குறிவைத்து உதயநிதி இறங்கியிருப்பதுதான் அவர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது.