அத்தி வரதர் தரிசனத்தை நீடிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

 

அத்தி வரதர் தரிசனத்தை நீடிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

அத்தி வரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி  உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்தி வரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி  உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது அத்தி வரதர் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். 

அத்தி வரதர் வரும் 16 ஆம் தேதி வரையிலேயே பக்தர்களுக்குக் காட்சியளிக்கவுள்ள நிலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில்  சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவரான சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் அத்தி வரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். அனந்த சரஸ் குளத்தைத் தூர்வாரக்கோரும் வழக்கில் இணைத்து தனது மனுவை விசாரிக்கக் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கானது   நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட மனுதாரர் தரப்பில், அத்தி வரதர் தரிசனத்தை 10 நாட்கள் நீட்டிக்கக் கோரி முதல்வர் பரிசீலித்து வருவதாக சில ஆவணங்கள் கொடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த அரசு தரப்போ, முதல்வரும், இந்து அறநிலையத்துறை அமைச்சரும், ஆகமவிதிப்படியே அனைத்தும் நடக்கும் என்று கூறிவிட்டனர். எனவே 48 நாட்களுக்கு மேல் தரிசனத்தை நீட்டிக்க முடியாது என்று வாதிட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்து முடித்த நீதிபதி,  அனந்த சரஸ் குளத்தைத் தூர்வாரக்கோரும் வழக்கில் இந்த  வழக்கை இணைக்க முடியாது. கோயில் விவகாரங்களை அரசும், அறநிலையத்துறையும் தான் விசாரிக்க வேண்டும். அப்படி மக்கள் நலனுக்காக வழக்கு தொடர்ந்தால் பொதுநல வழக்காகத் தான் தொடர வேண்டும்.’ என்றார்.  மேலும் தொடர்ந்து பேசிய அவர், இவ்வாறு வழக்கு தொடர்ந்ததற்கு மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாக எச்சரித்தார். 

நீதிபதியின் எச்சரிக்கையையடுத்து மனுதாரர் மனுவைத் திரும்பப் பெறுவதாகக் கூறினார். இதனால் இந்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.