அத்திவரதர் எப்படி தோன்றினார்? காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலின் அதிசயங்கள்*

 

அத்திவரதர் எப்படி தோன்றினார்? காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலின் அதிசயங்கள்*

நம்முடைய பூலோக வாழ்விற்கு பின்னர் மோட்சம் கிடைக்க வேண்டுமானால் காசி, அயோத்தியா, துவாரகா, மதுரா, மாயா, அவந்தி, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் பிறந்திருக்க வேண்டும். அப்படி இந்த நகரங்களில் பிறக்கும் பேறு கிடைக்காதவர்கள், இந்த நகரங்களில் குடி கொண்டிருக்கும் பெருமாளைத் தரிசித்தாவதிருக்க வேண்டும் என்று நம் புராணக் கதைகள் சொல்கின்றன. 40 வருடங்களுக்குப் பின் நீருக்குள்ளிருந்து வெளியே வந்து அத்தி வரதனை’ தரிசித்தால், பிறவி பயனடைந்து மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம். 

நம்முடைய பூலோக வாழ்விற்கு பின்னர் மோட்சம் கிடைக்க வேண்டுமானால் காசி, அயோத்தியா, துவாரகா, மதுரா, மாயா, அவந்தி, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் பிறந்திருக்க வேண்டும். அப்படி இந்த நகரங்களில் பிறக்கும் பேறு கிடைக்காதவர்கள், இந்த நகரங்களில் குடி கொண்டிருக்கும் பெருமாளைத் தரிசித்தாவதிருக்க வேண்டும் என்று நம் புராணக் கதைகள் சொல்கின்றன. 40 வருடங்களுக்குப் பின் நீருக்குள்ளிருந்து வெளியே வந்து அத்தி வரதனை’ தரிசித்தால், பிறவி பயனடைந்து மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம். 

athivarathar

கோயில்களின் நகரம் காஞ்சிபுரம். பண்டைய பல்லவ மன்னர்களின் தலைநகரமாக வீற்றிருந்த காஞ்சியை நகரேஸூ காஞ்சி என்றழைத்தனர். பெருமாளின் 108 திருப்பதிகளில், 14 கோயில்கள் காஞ்சிபுரத்திலேயே இருக்கின்றன. இந்த 14 திருப்பதிகளுல் முதன்மையானது சின்ன காஞ்சிபுரத்திலுள்ள திருக்கச்சி எனும் அத்திகிரி.  அலங்காரப் ப்ரியனான பெருமாள், எப்பொழுதும் பட்டுப் பீதாம்பரத்தில் இருந்து மகிழ்துறையும் தலமாக இருப்பதால் தான் காஞ்சிபுரம் இன்றும் பட்டு உற்பத்தியில் உலகில் சிறந்து விளங்குகிறது.
அத்தி வரதரைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கிறது?
இந்த உலகத்தைப் படைத்த பிரம்மா, தனது பணியைத் துவங்குவதற்கு முன்பாக வேள்வி துவங்கி, திருமாலை வணங்கி அருள் பெற்ற தலம் இந்த அத்தி கிரி தான். தன்னை மதிக்காத கணவனை எந்த மனைவி தான் பொறுத்துக் கொள்வாள். ஊர் மெச்ச வேள்வியை துவங்கிய பிரம்மா மீது சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டது. ‘பெண் கோபப்பட்டால் வீட்டிற்கு கேடு’ என்று அப்போது முதல் தான் சொல்ல ஆரம்பித்தார்கள். பெரும் கோபம் கொண்ட சரஸ்வதி, ஜீவநதியாய் பெருக்கெடுத்து, தன் சக்தி முழுவதையும் திரட்டி, பிரம்மனின் வேள்வித் தீயை அணைக்க முயன்றாள். சச்சரவுகளைத் தீர்த்து வைக்கும் நாயகன் திருமால் தானே? அவசர அவசரமாய், தன்னுடைய பிரச்சினையைத் தீர்க்குமாறு திருமாலை வேண்டினார் பிரம்மன்.  கரை புரண்டோடி வந்துக் கொண்டிருக்கும் நதியின் பாதையில், குறுக்கே படுத்துக் கொண்டான் வேடிக்கைகளின் நாயகன் பரந்தாமன். அவனைத் தாண்டாமல் பிரம்மனின் வேள்வியை எப்படி நெருங்க முடியும்?

athivarathar

ஆக்ரோஷமாய், தலைவிரி கோலமாய், கட்டுக்கடங்காமல் கரைபுரண்டோடி நதி ரூபத்தில் பிரவாகமாய் வந்துக் கொண்டிருந்த சரஸ்வதி, அனந்த நாராயணன் பாதையின் குறுக்கே ஆனந்த சயனத்தில் படுத்திருப்பதைப் பார்த்ததும், தன் சினம் தவிர்த்தாள். தன்னுடைய கோபத்தை எண்ணி, நாணிக் கோணி அருள் பிரவாகமாய், அழகு நதியாய் சாந்த சொரூபிணியானாள். இன்றும் காஞ்சிபுரத்தில் அந்த ஆறு வேகவதியாய் ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பின் பிரம்மாவுடன், இணைந்து வேள்வியையும் நடத்தினாள். வேள்வி தீயில் இடப்பட்டவைகளைப் பெருமாளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரம்மன் வேண்ட, பெருமாள் இந்த அத்திகிரியில் அக்னிப்பிழம்பாக நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அதனால் தான் இந்த தலத்தில் இருக்கும் உற்சவரின் திருமுகத்தில் அக்னியால் ஏற்பட்ட வடுக்களைப் போன்ற புள்ளிகள் தோன்றியது. இன்றும் கோவிலுக்குச் சென்று தரிசிக்கும் போது, பெருமாளின் முகத்தில் வடுக்களைப் பார்க்கலாம். 
பிரம்மனுக்குக் கொடுத்தால் மட்டும் போதுமா… பக்தர்களுக்கு? வேள்வியில் பங்கேற்ற தேவர்களும் வரங்களைக் கேட்டு வரிசையில் நிற்க, கேட்கும் வரங்களை எல்லாம் கொடுத்தார் பெருமாள். அதனால் தான் பெருமாளை இங்கே வரதா… வரதா.. என்று பக்தி பிரவாகத்தில் பக்தர்கள்  உருகி அழைக்கிறார்கள். கேட்கும் வரங்களை எல்லாம் தருபவன் வரதன். அன்றிலிருந்தே வரதர் என்கிற பெயரும் பெருமாளோடு சேர்ந்துக் கொண்டது. 

athivarathar

கோயிலில் எழுந்தருளிய பெருமாள், என்றென்றும் நிரந்தரமாய் இங்கேயே தங்கியிருப்பதற்காக (நித்யவாசம்) தேவலோக யானையான ஐராவதம் மலையின் வடிவெடுத்து, திருமாலைத் தாங்கி நின்றது. அத்தி மரத்தினால் ஆனவர் என்பதால் மட்டுமே அத்திவரதர் என்ற பெயர் கிடையாது. அத்தி என்றால் யானை. கிரி என்றால் மலை. அத்தியே கிரியானதால் இந்த தலம் அத்திகிரி என்றானது. அத்திகிரி, அத்தியூர், வாரணகிரி என்றெல்லாம் அழைக்கப்படுகிற வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் இன்னும் பல பல அதிசயங்கள் இருக்கின்றன.