அத்தியாவசிய தேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு இணையதளத்தில் அனுமதி சீட்டு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

 

அத்தியாவசிய தேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு இணையதளத்தில் அனுமதி சீட்டு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

அத்தியாவசிய தேவைகள் சார்ந்த நிறுவனங்கள் இணையதளம் மூலம் அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை: அத்தியாவசிய தேவைகள் சார்ந்த நிறுவனங்கள் இணையதளம் மூலம் அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மே 3-ஆம் தேதி வரை நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மிகவும் தேவையான அத்தியாவசிய விஷயங்களுக்காக செல்லும் வாகனங்களை மட்டும் சாலைகளில் போக்குவரத்து போலீசார் அனுமதிக்கின்றனர். புதிய விதிமுறைகளின்படி நாளை முதல் இ-காமர்ஸ் இணையதளங்கள் இயங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் டெலிவரி செய்யும் நபர்களும் இனி எவ்வித கட்டுப்பாடுமின்றி சாலையில் பயணிக்க முடியும். அதேசமயம் அத்தியாவசிய தேவைகளை சாராத பிற நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

chennai

இந்த நிலையில், அத்தியாவசிய தேவைகளை சார்ந்த நிறுவனங்கள் கட்டுப்பாடின்றி செயல்பட அந்நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாகனங்களின் போக்குவரத்துக்காக பெருநகர சென்னை மாநகராட்சி அனுமதி சீட்டுகளை வழங்கி வருகிறது. இதுவரை 652 நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் இவ்வாறு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது இத்தகைய அனுமதி சீட்டுகளை ஆன்லைன் மூலம் இணையதளம் வழியே பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி http://cov-id19.ch-e-n-n-a-i-c-o-r-p-o-r-at-i-on.gov.in என்ற லிங்க் மூலம் அத்தியாவசிய தேவை சார்ந்த நிறுவனங்கள் அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த அனுமதி சீட்டை பெற சரக்கு மற்றும் சேவை வரி பதிவு சான்றிதழ், ஊழியர்களின் அடையாள அட்டை, வாகன பதிவு சான்றிதழ் நகல்கள் மற்றும் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரின் கையொப்பம் கொண்ட கடிதம் ஆகிய ஆவணங்களுடன் காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதனால் இனி அனுமதி சீட்டை பெற நிறுவனங்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.