‘அது போன மாசம்.. நாங்க சொல்றது இந்த மாசம்’ – வடிவேலுவை மிஞ்சிய விஜய் ரசிகர்கள்!

 

‘அது போன மாசம்.. நாங்க சொல்றது இந்த மாசம்’ – வடிவேலுவை மிஞ்சிய விஜய் ரசிகர்கள்!

சர்கார் திரைப்படம் வெளியானபோது, இலவசங்களை தீயிட்டு கொளுத்திய விஜய் ரசிகர்கள், தற்போது பொங்கல் திருநாளுக்கு இலவசங்களை வாரி வழங்கி வருவது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

சென்னை: சர்கார் திரைப்படம் வெளியானபோது, இலவசங்களை தீயிட்டு கொளுத்திய விஜய் ரசிகர்கள், தற்போது பொங்கல் திருநாளுக்கு இலவசங்களை வாரி வழங்கி வருவது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்த படம் சர்கார். இப்படத்தில் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை, இலவசம் என விமர்சித்தது மட்டுமின்றி, தமிழக அரசு வழங்கிய பொருட்களை தீயிட்டு கொளுத்தவும் செய்திருந்தனர். 

மக்கள் நலத்திட்டங்களை விமர்சிப்பதற்கு சரியான இடம் சினிமா இல்லை என்றும், களத்திற்கு வந்து விஜய் அரசியல் பேச வேண்டும் எனவும் அதிமுகவினர் கொதித்தெழுந்தனர். இதற்கிடையே, சர்கார் படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர்கள் அதிமுகவினரால் தாக்கப்பட்டதால், படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியது. 

vijay

இது ஒரு புறம் இருக்க, திரைப்படத்தை வெறும் படமாக பார்க்கின்ற அளவுக்கு பக்குவமடையாத விஜய் ரசிகர்கள் சிலர், தங்கள் வீட்டில் அன்றாடம் பயன்பட்டுக் கொண்டிருந்த அரசின் நலத்திட்ட பொருட்களை சாலையில் போட்டு உடைத்தனர். பின்னர் அவரவர் வீட்டில் நடந்ததெல்லாம் தனிக்கதை. 

ஒருவேளை விஜய் ரசிகர்கள் எல்லோரும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதையோ, பெறுவதையோ விரும்ப மாட்டார்கள் என பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், பொங்கல் பண்டிகைக்கு இலவசங்களை வழங்கும் புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், ரசிகர் மன்றத்தின் மாநில நிர்வாகியான, புஸ்ஸி ஆனந்த்.

இதனையடுத்து, வைகைப்புயல் வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றில் இடம்பெறும், ‘அது போன மாசம்.. நாங்க சொல்றது இந்த மாசம்’ என்ற வசனத்திற்கு சிறந்த உதாரணம் விஜய்யின் அரைகுறை ரசிகர்கள் தான் என நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.