அது நாங்க இல்ல பாஸ்: ட்வீட் சர்ச்சைக்கு தமிழ் ராக்கர்ஸ் விளக்கம்!

 

அது நாங்க இல்ல பாஸ்: ட்வீட் சர்ச்சைக்கு தமிழ் ராக்கர்ஸ் விளக்கம்!

தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது.

சென்னை: தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், புதிதாக ரிலீசாகும் தமிழ் படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகிறது. இதனால் திரையுலகை சார்ந்த பலரது உழைப்பும் வீணாவதால், பைரசியை தடுக்க தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவ்வபோது, தமிழ் ராக்கர்ஸ் சில தமிழ் பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு சவால் விடுவதாக ட்விட்டரில் பதிவுகள் பகிரப்படும். அதுபோல், சமீபத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தின் ஹெச்டி பிரிண்ட் படம் வெளியாவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டு படமும் திருட்டுத்தனமாக லீக்கானது.

அதைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள 2.0’ திரைப்படம் விரைவில் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது, தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது, இது போல சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள சின்ன பாக்ஸில் இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது

அதில், ‘ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை. எங்கள் பெயரை பயன்படுத்தி யாராவது பதிவிட்டால் அது போலியே. அது போன்ற ஐடிக்களை, அவர்கள் பரப்பும் வதந்திகளை நம்பாதீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது