அதிமுக எம்.பி.,-க்கள் பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொண்டிருக்கிறார்: ராகுல் ஆவேசம்

 

அதிமுக எம்.பி.,-க்கள் பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொண்டிருக்கிறார்: ராகுல் ஆவேசம்

மக்களவையில் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு விவாதம் நடைபெறாமல் தடுத்து பிரதமர் மோடியை பாதுகாக்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்

டெல்லி: மக்களவையில் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு விவாதம் நடைபெறாமல் தடுத்து பிரதமர் மோடியை பாதுகாக்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிடம்பர் மாதம் 11-ம் தேதி கூடியது. ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத் தொடரில், ராமர் கோயில், சிபிஐ இயக்குனர் விவகாரம், ரஃபேல் விமான ஒப்பந்தம், உர்ஜித் படேல் ராஜினாமா உள்பட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே, இந்த விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் இன்று வரை நிறைவேறவில்லை. திருத்தப்பட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தது வருகின்றன.

இதனிடையே, மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்.பி.,-க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து முடங்கியது. எனவே, நாடாளுமன்றத்தை முடக்க தமிழக எம்.பி.,-க்களுடன் பாஜக கூட்டு வைத்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசினார். அப்போது, மக்களவையில் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு விவாதம் நடைபெறாமல் தடுத்து பிரதமர் மோடியை பாதுகாக்கின்றனர் என அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவராக அரசி கேள்வி கேட்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. பல்வேறு போர் விமானங்களை தயாரித்த HAL நிறுவனத்துக்கு ரஃபேல் ஒப்பந்தத்தை ஏன் வழங்கவில்லை? பிரதமரின் நண்பர் அனில் அம்பானிக்கு அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன்? காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ரூ.1600 கோடிக்கு வாங்க முடிவு செய்தது ஏன்? என சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.

ஒரு மணி நேரத்திற்கு உரையாற்றும் பிரதமர் மோடி ரஃபேல் பற்றி 5 நிமிடம்கூட பேசவில்லை என குற்றம் சாட்டிய ராகுல், ஒட்டுமொத்த தேசமே பிரதமரின் பதிலை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை எனவும் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தத்தை அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஒதுக்க பிரான்ஸ் அதிபரை பிரதமர் மோடி வலியுறுத்தினார். அது தொடர்பான ஆடியோ உள்ளது. அதனை ஒலிபரப்ப அனுமதிக்க வேண்டும் எனவும் ராகுல் கோரிக்கை விடுத்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஆடியோவின் நம்பகத்தன்மைக்கு பொறுப்பேற்க தயாரா? என ராகுலுக்கு கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ராகுல் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ராகுல் பேசியதாக கூறியதை பிரான்ஸ் அதிபர் மறுத்துள்ளார். கடந்த முறை பிரான்ஸ் அதிபருடன் பேசியதாக ராகுல் பொய் கூறினார். போர் விமானம் குறித்த தெளிவே இல்லாதவர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். ஒப்பந்தத்தின் அம்சங்கள் சிறு குழந்தைக்கு கூட புரியும் பொய் பேசும் போது கேட்பது போன்று உண்மை பேசும் போதும் கேட்க வேண்டும். நாட்டின் சில குடும்பத்தினருக்கு தேசத்தின் பாதுகாப்பை விட பணமே முக்கியமாக உள்ளது என்றார்.