அதிமுக அமைச்சரின் 3ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

 

அதிமுக அமைச்சரின் 3ஆண்டுகள்  சிறை தண்டனையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் கோரிக்கையைச் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

சென்னை: 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் கோரிக்கையைச் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கடந்த 1998-ம் ஆண்டு கள்ளச்சாராயம் வியாபாரத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள பாலகிருஷ்ண ரெட்டி, தண்டனையை ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்த இடைக்கால மனு, நீதிபதி பார்த்திபன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

judgement

பாலகிருஷ்ணா ரெட்டி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ரமேஷ், சித்தார்த் ஆஜராகி வாதிட்டனர். வழக்கில் 7வது எதிரியாக சேர்க்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணா ரெட்டிக்கு எதிராக நேரடி சாட்சியங்கள் ஏதுமில்லை என அவர்கள் கூறினர். விசாரணை நீதிமன்றம் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாகக் கருத்தில் கொள்ளவில்லை என்றும்  பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும் கோரிக்கையை நிராகரித்தார். தற்போதைய நிலையில் இடைக்கால மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி, மேல்முறையீட்டு வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தும் உத்தரவிட்டார். மேல் முறையீட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, தண்டனையை ரத்து செய்யக் கோரிக்கை வைத்தால், அப்போது நீதிமன்றம் பரிசீலிக்கும் என நீதிபதி பார்த்திபன் தெரிவித்தார்.