அதிக வேகமா? அதிக போதையா? இந்தோனேசிய விமான விபத்துக்கு என்ன காரணம்?

 

அதிக வேகமா? அதிக போதையா? இந்தோனேசிய விமான விபத்துக்கு என்ன காரணம்?

இந்தோனேசிய விமான விபத்துக்கு அதிக வேகம் அல்லது விமானி அதிகளவு மது போதையில் இருந்தது காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன

ஜகர்த்தா: இந்தோனேசிய விமான விபத்துக்கு அதிக வேகம் அல்லது விமானி அதிகளவு மது போதையில் இருந்தது காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு கடந்த மாதம் 29-ம் தேதி காலையில் புறப்பட்ட நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி 610 என்ற போயிங் ரக விமானம், வானில் பறந்த 13 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து ஜகார்த்தாவின் வடகடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி விமானத்தில் பயணித்த பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 189 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, நடைபெற்ற மீட்பு பணிகளின் போது, ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த வகையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு, விபத்துக்கு முந்தைய நொடிகளில் என்ன நடந்தது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு மணிக்கு ஆயிரத்து 14 கிலோமீட்டர் வேகத்திற்கு சென்றதாக ராடார் பதிவுகளில் தெரிய வந்துள்ளது. அந்த வேகத்திலேயே அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது. மேலும், கடலை நோக்கி விமானம் செங்குத்தாக சென்று விழுந்தது ஏன் என்று ஆலோசித்து வரும் வல்லுனர்கள், விமானத்தின் அதிவேகம் தான் விபத்துக்கு காரணமா என்றும் ஆலோசித்து வருகிறார்கள்.

இதனிடையே, விமானத்தை இயக்கிய விமானி அதிகளவில் மது அருந்தி போதையில் இருந்ததாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கியது இந்தியாவை சேர்ந்த விமானி பாவ்யே சுனேஜா என்பது குறிப்பிடத்தக்கது.