அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மூன்று மாவட்டங்களில் ஒத்திவைப்பு

 

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மூன்று மாவட்டங்களில் ஒத்திவைப்பு

கஜா புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மூன்று மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

சென்னை: கஜா புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மூன்று மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன. வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்ல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் சில டெல்டா மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், அந்த மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.