அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு: கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?

 

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு: கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

திமுக – மதிமுக – விசிக – இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தோழமையோடு செயல்பட்டு வந்த சூழலில், இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை, தோழமை கட்சிகள் மட்டுமே என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறி சர்ச்சை நெருப்பை பற்ற வைத்திருந்தார்.

இந்த சர்ச்சை, தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. குறிப்பாக சமுகவலைதளங்களில் மேல் குறிப்பிடப்பட்ட கட்சிகளுக்கு ஆதரவாக இயங்கி வரும் சிலர், பரஸ்பரம் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்த தகவல்கள் அனைத்தும் கட்சி தலைமைகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மதிமுக நடத்தும் போராட்டத்திற்கு, திமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

stalin

இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த டிடிவி. தினகரனுடன், திருமாவளவன் திடீரென சந்தித்துப் பேசியது திமுக சீனியர்களுக்கு மட்டுமின்றி, விசிகவினருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று காலை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது ஸ்டாலினுடன், திமுக சார்பில் தயாநிதி மாறன், ஆர்.எஸ் பாரதி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.

arivalayam

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “டிச. 10-ம் தேதி நடத்தவிருக்கும் மாநாடு மற்றும் கஜா புயல் பாதிப்புகள் குறித்து ஸ்டாலின் உடன் ஆலோசித்தேன். திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொண்டுள்ள நட்பு, இணக்கமாக, வலுவாக உள்ளது, இதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை. திமுக அணியில் உள்ள கட்சிகளுடன் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கும் சிலரின் எண்ணம் நிறைவேறாது. இடைத்தேர்தல் தேதி அறிவித்ததும் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.