அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை அமைக்க சென்னை மாநகராட்சி அனுமதி

 

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை அமைக்க சென்னை மாநகராட்சி அனுமதி

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை அமைக்க நிபந்தனையுடன் சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை அமைக்க நிபந்தனையுடன் சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவர் மறைவிற்குப் பின் அவரின் புகழை பறைசாற்றும் வகையில் பல்வேறு தலைப்புகளில் புகழஞ்சலி கூட்டங்களை திமுக தலைமை நடத்தி வருகிறது.அக்கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகே கருணாநிதி சிலையை நிறுவ திட்டமிட்டுள்ளார். அதனடிப்படையில், பிரபல சிலை வடிவமைப்பாளர்களான தீனதயாளன், கார்த்திக் ஆகியோர் 8 அடி உயரத்தில் கருணாநிதியின் வெண்கல சிலையை வடிவமைத்து வருகின்றனர்.

கருணாநிதி மறைந்து 100-வது நாளான நவம்பர் மாதம் 15-ம் தேதியன்று தேசிய தலைவர்கள் முன்னிலையில் கருணாநிதி சிலை திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகில் கலைஞருக்கு சிலை வைக்க திறந்தவெளி நிலம் தொடர்பான விதிகளைப் பயன்படுத்தி (ஓஎஸ்ஆர்) தமிழக அரசு சிக்கல் ஏற்படுத்த இருக்கிறது என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை அமைக்க நிபந்தனைகளுடன் சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. வரும் காலத்தில் சாலை விரிவாக்கத்திற்கு இடம் தேவைப்பட்டால் ‘சிலை அகற்றபடும்’ என்ற நிபந்தனையுடன் சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.