’அண்ணாச்சி ஒருநாள்கூட சிறைக்குச் செல்லாதநிலையில் என் கணவரின் ஆன்மா சாந்தி அடையாது’…இன்னும் ஆத்திரம் தீராத ஜீவஜோதி…

 

’அண்ணாச்சி ஒருநாள்கூட சிறைக்குச் செல்லாதநிலையில் என் கணவரின் ஆன்மா சாந்தி அடையாது’…இன்னும் ஆத்திரம் தீராத ஜீவஜோதி…

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் இறப்பு வருத்தம் அளித்தாலும் தனது கணவர் கொலை வழக்கில் ஒரு நாள் கூட சிறைக்கு செல்லாமல்  உயிரிழந்ததை, தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கொலை செய்யப்பட்ட பிரின்ஸ் சாந்தகுமார் மனைவி ஜீவஜோதி தெரிவித்துள்ளார். 

சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உயிரிழந்தது குறித்து வலதளங்களில் பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறிவரும் நிலையில், அவரது மறைவு குறித்து ஜீவஜோதியிடம் நிருபர்கள் கேட்டபோது,’நான் உயிருக்கு உயிராக பிரின்ஸ் சாந்தகுமாரை காதலித்து திருமணம் செய்து சந்தோசமாக வாழ்க்கை தொடங்கினேன். ஆனால் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் என்னை மூன்றாவது திருமணம் செய்ய எனக்கு பல வகையில் தொந்தரவு செய்தார். 

ஆனால் அதையும் மீறி நான் எனது கணவருடன் வாழ்ந்து வந்தேன். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ராஜகோபால் தனது அடியாட்களை வைத்து எனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கடத்தி மலை அடிவாரத்தில் கொடூரமாக கொலை செய்தார். சின்ன வயதில் எனக்கு அது பெரிய இழப்பாக இருந்தது. பல எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் தாண்டி நீதிமன்றம் மூலம் ராஜகோபால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. அதை எதிர்த்து ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ராஜகோபால்

ஆனால் எனது நியாயமான போராட்டத்துக்கு உச்ச நீதிமன்றமும் ராஜகோபால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. அந்த நாள் என் வாழ்நாளில் எனக்கு மறக்கமுடியாத நாளாக அமைந்தது.எனது கணவரின் கொலை வழக்கில் குற்றவாளி என உறுதியாகி ஆயுள் தண்டனை பெற்ற பிறகு ராஜகோபால், தனது உடல் நிலையை காரணம் காட்டி ஒரு நாள் கூட சிறைக்கு செல்லாமல் உயிரிழந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அவர் உயிரிழந்தது ஒரு வகையில் வருத்தம் அளித்தாலும், சிறைக்கு செல்லாமல் இறந்ததால் என் கணவரின் ஆத்மா சாந்தியடையாது. எனக்கும் இந்த நிகழ்வு ஆறாத வடுவாக உள்ளது’ என்று இன்னும் தணியாத ஆத்திரத்துடன் பேசுகிறார் ஜீவஜோதி.