அடுத்த 25 வருஷத்துக்கு சிவ சேனா தலைமையில்தான் ஆட்சி- சஞ்சய் ரவுத் உறுதி

 

அடுத்த 25 வருஷத்துக்கு சிவ சேனா தலைமையில்தான் ஆட்சி- சஞ்சய் ரவுத் உறுதி

மகாராஷ்டிராவில் இன்னும் ஆட்சியை அமைக்காத நிலையில், அடுத்த 25 வருஷத்துக்கு அங்கு சிவ சேனா தலைமையிலான ஆட்சி இருக்கும் என அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 18 நாட்கள் தாண்டி விட்ட போதும், எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்காமல் இழுத்தடித்து வந்தன. இதனையடுத்து அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யரி குடியரசு தலைவர் ஆட்சி அமைக்க பரிந்துரை செய்தார். ஆக, தற்போது அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான வேலைகளில் சிவ சேனா தீவிரமாக உள்ளது.

சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்

இந்நிலையில், சிவ சேனாவின் மூத்த தலைவர்களின் ஒருவரான சஞ்சய் ரவுத், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மகாராஷ்டிராவில் சிவ சேனா தலைமையிலான அரசுதான் அமையும். தற்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

சோனியா காந்தி, சரத் பவார், உத்தவ் தாக்கரே

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மகாராஷ்டிராவில் சிவ சேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பொதுவான குறைந்தபட்ச திட்டத்துக்கு ஒப்புகொண்டுள்ளன. எனவே மகாராஷ்டிராவில் எங்களது மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைக்கும். மேலும் கூட்டணி அரசு முழுமையாக ஆட்சி காலத்தை நிறைவு செய்வதை உறுதி செய்வோம். மகாராஷ்டிராவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.