அடுத்த 24 மணி நேரத்தில் புயல்: மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்-வானிலை மையம் எச்சரிக்கை

 

அடுத்த 24 மணி நேரத்தில் புயல்: மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்-வானிலை மையம் எச்சரிக்கை

சென்னைக்கு தென் கிழக்கே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: சென்னைக்கு தென் கிழக்கே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்  பாலசந்திரன் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே  690 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.  இதன் வேகம் மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று ஆந்திரா மாநிலம் ஓங்கோல்  மற்றும் காக்கிநாடா  இடையில் டிசம்பர் 17-ம் தேதி பிற்பகலில் கரையை கடக்க கூடும். காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் டிசம்பர் 15 16 17 ஆகிய தேதிகளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று லேசான மழையும் நாளை மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று கூறியுள்ளார்.