அடுத்த கட்சிக்கு தாவினார் பிரபல நடிகை ஜெயசுதா!

 

அடுத்த கட்சிக்கு தாவினார் பிரபல நடிகை ஜெயசுதா!

பிரபல நடிகையான ஜெயசுதா, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்

அமராவதி: பிரபல நடிகையான ஜெயசுதா, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

பிரபல நடிகையான ஜெயசுதா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். கடந்த 1970 – 80-களில் தெலுங்கு திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர்.

என்.டி.ராமாராவ், அக்கினேனி நாகேஸ்வரராவ், ஷோபன் பாபு, சிரஞ்சீவி உள்ளிட்ட பல மூத்த நடிகர்களுடன் நடித்தவர்.

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் செக்கந்திரபாத் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ-வான இவர், அக்கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்தார். இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் கடந்த 2016-ஆம் ஆண்டு இணைந்தார்.

ஹைதராபாத்தின் வளர்ச்சிக்கும், தகவல் தொழில்நுட்ப நகரமாக ஹைதராபாத்தை மாற்றிய பெருமையும் சந்திரபாபு நாயடுவுக்கே உரியது என அப்போது அவர் கூறினார். மேலும், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரான என்டி ராமாராவுடன் நடித்த அனுபவத்தையும், அக்கட்சிக்காக 1990-களில் பிரசாரம் செய்ததையும் ஜெய சுதா அப்போது நினைவு கூர்ந்திருந்தார்.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் ஜெயசுதா இணைந்துள்ளார். அக்கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்த ஜெயசுதா, அவரது முநிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

எதிர்வரவுள்ள தேர்தலில் போட்டியிடும் விருப்பம் தற்போதைக்கு இல்லை என தெரிவித்த அவர், கட்சி தலைமையின் வழிகாட்டுதல் படி பணிபுரியவுள்ளதாகவும், ஆந்திராவின் அடுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தான் எனவும் ஆருடம் தெரிவித்தார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது மகிழ்ச்சி. தாய்வீட்டுக்கு திரும்பிய மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதாக தெரிவித்த ஜெயசுதா, தான் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது, ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியுடன் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார்.