அடி மேல் அடியால் கலங்கும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 143 புள்ளிகள் வீழ்ந்தது.

 

அடி மேல் அடியால் கலங்கும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 143 புள்ளிகள் வீழ்ந்தது.

இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து 4வது நாளாக சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 143 புள்ளிகள் வீழ்ந்தது.

கொரோனாவைரஸ் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளதால் உலக நாடுகள் பயத்தில் உள்ளன. மத்திய அரசு நாளை கடந்த டிசம்பர் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து புள்ளிவிவரத்தை வெளியிடுகிறது. அந்த காலாண்டில் ஜி.டி.பி.யில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் பிப்ரவரி மாத பங்கு முன்பேர கணக்கு முடிக்கப்படும் என்பதால் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்று தள்ளினர். மேலும் பங்குகளில் முதலீடு செய்வதை காட்டிலும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது போன்ற  காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது.

சன்பார்மா

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா, டைட்டன், ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் மாருதி சுசுகி உள்பட 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி., எச்.சி.எல். டெக்னாலஜிஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் ஸ்டேட் வங்கி உள்பட 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஓ.என்.ஜி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 849 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,578 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 162 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.40 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.79 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 143.30 புள்ளிகள் இறங்கி 39,745.66 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 45.20 புள்ளிகள் குறைந்து 11,633.30 புள்ளிகளில் முடிவுற்றது.