அடிலெய்ட் டெஸ்ட்டில் வெற்றி: ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வரலாற்று சாதனை

 

அடிலெய்ட் டெஸ்ட்டில் வெற்றி: ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வரலாற்று சாதனை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது

-குமரன் குமணன்

 

அடிலெய்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரண்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்தது. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 3-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து, 4-வது நாளான நேற்று புஜாராவும், ரஹானேவும் அணிக்கு வலுவூட்டும் வகையில் நிதானமாக ஆடினர். இறுதியாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

ஆஸ்திரேலிய அணி சார்பில் லையன் 6 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதன்பின் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 49 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு ஆஸ்திரேலிய அணியின் 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற நிலையிலும், அந்த அணியின் வெற்றிக்கு மேற்கொண்டு 219 ரன்கள் தேவை என்ற நிலையிலும்  ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியின் ஹெட் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருடன் விளையாடிய மார்ஷ் 66-வது ஓவரில் பவுண்டரி அடித்து அரை சதம் கடந்து 60 ரன்களில் வெளியேறியுள்ளார்.  ஹேண்ட்ஸ்கோம்ப் (14), பெய்னி (41) ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணி உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை அடுத்து, கம்மின்ஸ் மற்றும் பெய்ன் ஆகிய இருவரையும் பும்ரா வெளியேற்றினார். கடைசி கட்டத்தில் 1 விக்கெட் எடுத்தால் வெற்றி என்ன நிலையில், ஆட்டம் பரபரப்பை எட்டியது. கடைசியில் இறங்கிய நேதன் லயன் நிலைத்து நின்று விளையாட போட்டி டிராவை நோக்கிச் சென்று விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. எனினும், கடைசி விக்கெட்டை அஸ்வின் கைப்பற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஒரு வெற்றியுடன் முன்னிலை வகித்து வருகிறது.

இந்திய அணி இதற்கு முன்பு அடிலெய்ட் மைதானத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டில் ஒரு முறை மட்டும் வெற்றி பெற்று இருக்கிறது. அதற்கு பின்னர், அந்த மைதானத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வெற்றியை சுவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது இந்திய அணியின் 12-வது ஆஸ்திரேலிய பயணமாகும். முந்தைய 11 பயணங்களிலும் இந்திய அணி தங்களது முதலாவது டெஸ்டுகளில் (9-ல் தோல்வி, 2-ல் டிரா) வெற்றி பெற்றதில்லை. எனவே இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை இந்தியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதே இல்லை என்கிற வரலாற்றையும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மாற்றியுள்ளது.

இப்போட்டியில் 123 (204) மற்றும் 71 (204) என மொத்தமாக 194 ரண்கள் எடுத்த புஜாரா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அடுத்த டெஸ்ட் போட்டி பெர்த் நகரின் புதிய கிரிக்கெட் களமாகிய பெர்த் ஸ்டேடியம் மைதானத்தில் வரும் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை 7.50 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகள் அந்த மைதானத்தில் நடந்துள்ள நிலையில், முதன் முதலாக அங்கு ஒரு டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.