அடிக்கடி வெளியில் சாப்பிடுபவர்கள், குழந்தைகளுக்கு தீராத தொல்லை தரும் குடற்புழுக்களில் இருந்து தப்பிப்பது எப்படி?

 

அடிக்கடி வெளியில் சாப்பிடுபவர்கள், குழந்தைகளுக்கு தீராத தொல்லை தரும் குடற்புழுக்களில் இருந்து தப்பிப்பது எப்படி?

குழந்தை சரியாகச் சாப்பிடாமல் வயிற்றுவலியால் அவதிப்பட்டால், குழந்தைக்குக் குடல்புழு பாதிப்பு இருக்கலாம் என அம்மாக்கள் நினைப்பார்கள். அந்த அளவுக்குக் குழந்தைகளைப் பரவலாகப் பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்னை. அதேபோல் அடிக்கடி வெளியூர் பயணம், வெளியூர் பணி மேற்கொள்பவர்களுக்கு ஒயாத தொல்லையை குடற்புழுக்கள் தந்துவிடும். இந்தத் தொந்தரவு ஏன் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு சில விஷயங்களைப் பின்பற்றினால் குடற்புழு பிரச்னையில் இருந்து எளிதாக விடுபடலாம்.

குழந்தை சரியாகச் சாப்பிடாமல் வயிற்றுவலியால் அவதிப்பட்டால், குழந்தைக்குக் குடல்புழு பாதிப்பு இருக்கலாம் என அம்மாக்கள் நினைப்பார்கள். அந்த அளவுக்குக் குழந்தைகளைப் பரவலாகப் பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்னை. அதேபோல் அடிக்கடி வெளியூர் பயணம், வெளியூர் பணி மேற்கொள்பவர்களுக்கு ஒயாத தொல்லையை குடற்புழுக்கள் தந்துவிடும். இந்தத் தொந்தரவு ஏன் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு சில விஷயங்களைப் பின்பற்றினால் குடற்புழு பிரச்னையில் இருந்து எளிதாக விடுபடலாம்.

பொதுவாக குடற்புழுத் தொல்லை. சுயசுத்தம் குறைவதால் உண்டாகிறது. சுற்றுச்சூழல் சுகாதாரம் பெரிதும் மோசமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் சிறுவர், சிறுமிகளுக்கும் இளம் வயதினருக்கும்கூட இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

முக்கியக் காரணம்:

அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக, தெருவோரங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் தொல்லை அடிக்கடி வருகிறது. அசுத்தமான தெருவில், மண் தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது ஆகியவை குடல்புழு ஏற்படுவதற்குத் துணைபோகின்றன.

சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் உண்ணும் பழக்கம் இருந்தால் குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும், குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

புழு வளரும் விதம்:

குடல்புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையிலும் ஆண், பெண் என்று இனமுண்டு. பெண் புழு இடுகிற முட்டைகள் மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். குழந்தைகள் விளையாடும்போது கை விரல் நகங்களில் புகுந்துகொள்ளும். கைகளை நன்றாகச் சுத்தப்படுத்தாமல் சாப்பிடும்போது உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்குச் சென்று, பொரிந்து ‘லார்வா’எனப்படும் குறும்புழுக்கள் வெளிவரும்.

ஒவ்வொரு லார்வாவும் சிறுகுடலின் சுவரைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குச் சென்று சுமார் நான்கு நாட்கள் அங்கே தங்கும். பிறகு அங்கிருந்து இதயத்துக்குச் சென்று நுரையீரலுக்குள் நுழையும். பிறகு அங்கிருந்து உணவுக் குழாய்க்கு வரும், மீண்டும் இரைப்பை வழியாகக் குடலுக்கு வந்துசேரும் இந்த ‘சுற்றுலா’வுக்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகும். அதற்குள் ‘லார்வா’ கட்டத்தில் இருந்தவை முழு புழுக்களாக வளர்ச்சி பெற்றுவிடும். அதன்பிறகு நமக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கும்.

உருண்டை புழு:

குடல்புழுக்களில் பரவலாக நம்மைப் பாதிப்பது உருண்டைப் புழுக்கள். பார்ப்பதற்குப் பழுப்பு நிறத்தில் சரடு மாதிரி இருக்கிற இப்புழுக்கள் ஒரு நபரிடம் அதிகபட்சமாக 100 புழுக்கள்வரை காணப்படலாம். இப்புழுவால் பாதிக்கப்பட்டவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வரும். குமட்டல், வாந்தி, பசிக் குறைவு, அஜீரணம், வயிற்று உப்புசம் ஆகிய தொல்லைகள் தொடரும். சாப்பிடப் பிடிக்காது, உடல் மெலியும், உடல் எடை குறையும்.

இந்தப் புழுக்கள், புரதச் சத்தை விரும்பி சாப்பிடுவதால், பாதிக்கப்பட்ட நபருக்கு ‘புரதச் சத்து குறைவு நோய்’ வரும். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். தோலில் அரிப்பு, தடிப்புகள் தோன்றலாம்; வறட்டு இருமல், இளைப்பு ஏற்படலாம். குடலில் ஒரே இடத்தில் நிறைய புழுக்கள் சேர்ந்துவிட்டால் குடல் அடைத்துக்கொள்வதும் உண்டு.

கொக்கி புழு:

அமைப்பில் உருண்டைப் புழுக்களைப்போலவே இருக்கிற கொக்கிப்புழுக்கள் அளவில் மட்டும் மிகச் சிறியவை. இவற்றின் லார்வாக்கள், மனிதப் பாதத்தின் தோலைத் துளைத்துக்கொண்டு நேரடியாகவே ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் சென்று இதயம், நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை வழியாகக் குடலுக்கு வந்து புழுக்களாக உருமாறுவது உண்டு.

இவற்றின் வாய்ப் பகுதி கொக்கிபோல் வளைந்திருக்கும். அதில் நான்கு கொக்கி போன்ற பற்கள் இருக்கும். குடல் சுவரில் கொக்கி கோத்ததுபோல் தொங்கிக்கொண்டிருக்கும். குடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி வாழும். இந்தப் புழு தாக்கியுள்ள நபருக்கு வயிற்றுப் பிரச்னைகளோடு ரத்தசோகை நோய் ஏற்படுத்துவதுதான் முக்கியமான பாதிப்பு.

ஒரு கொக்கிப் புழுவானது நாளொன்றுக்கு 0.2 மில்லி ரத்தத்தை உறிஞ்சிவிடும். ஒருவருடைய குடலில் ஒரே நேரத்தில் நூறு புழுக்களுக்கும் அதிகமாக வசிப்பதுண்டு. அப்படியானால் இந்தப் புழுக்கள் தினமும் எவ்வளவு ரத்தத்தைக் குடித்து நம்மைப் பாதிக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள். நடைமுறையில் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாதங்களில் பித்தவெடிப்பு, சேற்றுப்புண் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட வேலை செய்பவர்களுக்குக் கொக்கி புழு பாதிப்பு மிக அதிகம்.

நூல் புழு:

குடல் புழுக்களில் மிகச் சிறியவை நூல்புழுக்கள். பார்ப்பதற்கு வெட்டிப்போட்ட பருத்தி நூல்போல் வெள்ளை நிறத்தில் இருக்கிற இப்புழுக்கள், குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கும். மற்றப் புழுக்கள் எல்லாம் குடலில்தான் முட்டை இடும். இவை மட்டும் மனிதனின் மல வாயில் முட்டை இடுகின்றன. இதனால் அங்கு அரிப்பு ஏற்படும். இரவில் ஏற்படும் மலவாய் அரிப்புதான் இந்தப் புழுக்களால் ஏற்படுகிற பெருந்தொல்லை. இதன் விளைவால் பலருக்கும் இரவில் தூக்கம் கெடும்.

சாட்டை புழு:

பார்ப்பதற்குச் சாட்டையைப் போல ஒரு முனை தடித்தும் மறுமுனை ஒல்லியாக நீண்டும் இருப்பதால் இப்புழுவுக்குச் சாட்டைப்புழு என்று பெயர். குழந்தை இரவில் திடீரென்று உறக்கத்தில் எழுந்து அழுதால் அல்லது வயிற்றுவலி என்று சொன்னால் சாட்டைப்புழு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த வகைப் புழுக்கள் பாதித்த குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கும் ஏற்படும். பசியே இருக்காது, சாப்பிடமாட்டார்கள். உடல் எடை குறையும். உடல் மெலியும், இவர்கள் ஒல்லியாகவும் மந்தமாகவும் இருப்பார்கள்.

நாடா புழு:

ஒரு பாவாடை நாடாபோல வெள்ளை நிறத்தில் நீளமாக இருக்கிற புழுக்களுக்கு நாடாப் புழுக்கள்  என்று பெயர். சாதாரணமாக எல்லோருக்கும் இந்தப் புழுக்கள் தொற்றுவதில்லை. நாயுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள், மாட்டு இறைச்சி/பன்றி இறைச்சியைச் சாப்பிடுபவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இவை தொற்றுகின்றன. மாடு மற்றும் பன்றியின் தசைகளில் இந்தப் புழுக்களின் லார்வாக்கள் வசிப்பதே இதற்குக் காரணம். வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற தொல்லைகள் இதனால் வரலாம். மேலும் கல்லீரல், நுரையீரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றில் நீர்க் கட்டிகள் வளர்வதும் உண்டு.

சிகிச்சை முறைகள்: 

குடல் புழுவை ஒழிக்கப் பெரியவர்களுக்கு மாத்திரையாகவும் குழந்தைகளுக்குத் திரவ மருந்தாகவும் பல மருந்துகள் கிடைக்கின்றன. எந்தப் புழுவின் பாதிப்பு உள்ளது என்பதை மலப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருத்துவர் யோசனைப்படி மருந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் 100 சதவீதம் அழிந்துவிடும். அதேவேளையில் கீழே சொல்லப்பட்டிருக்கும் சுகாதார முறைகளையும் கடைப்பிடித்தால்தான் குடல்புழுக்கள் மீண்டும் மீண்டும் தொல்லை தராது.

தவிர்க்கும் முறைகள்: 

சுயசுத்தம் காக்கப்பட வேண்டும். சுற்றுப்புறச் சுகாதாரம் மேம்பட வேண்டும்.
குளிப்பறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக் கூடாது.

கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்வதற்குப் பழக்கப்படுத்துங்கள்.
சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக் கூடாது. சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள்.
நகங்களைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும். குழந்தைகள் விரல் சூப்பக் கூடாது.

குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம்.
எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளைக் குடிநீருக்கோ, உணவுக்கோ கொண்டுவருவதில் ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.
காய், கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.நன்றாகக் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.பாதுகாக்கப்பட்ட உணவு வகைகளையே உண்ண வேண்டும்.சாப்பிடுவதற்கு முன்பு கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம்.காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும்.
அசுத்தமான குளம், குட்டை, ஏரி, நீச்சல்குளம் போன்றவற்றில் குளிப்பதையும் நீச்சலடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். பித்த வெடிப்பு, சேற்றுப்புண் இருந்தால் உடனே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.
தரமான கடைகளில் மட்டுமே இறைச்சியை வாங்க வேண்டும்.மீன், இறைச்சி போன்றவற்றை நன்றாக வேகவைத்த பின் சாப்பிட வேண்டும்.
வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அதைத் தூக்கி கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
இந்த முறைகளைப் பின்பற்றினால் குடல்புழு பிரச்னை அண்டவே அண்டாது.