அஜீத்தை நாங்கள் அழைக்கவில்லை: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

 

அஜீத்தை நாங்கள் அழைக்கவில்லை: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

நடிகர் அஜீத்தை பாஜகவுக்கு அழைக்கவில்லை என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை: நடிகர் அஜீத்தை பாஜகவுக்கு அழைக்கவில்லை என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அஜீத் ரசிகர்கள் தங்களை பாஜகவில் இணைத்து கொண்டனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். 

அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். இனி மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டுச் செல்ல வேண்டும். அஜித் ரசிகர்கள் மோடி தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்றார்.

ஆனால், நடிகர் அஜீத்தோ நேற்று வெளியிட்ட அறிக்கையில், தனக்கு  அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஆர்வமும் இல்லையென்றும் என் பெயரோ, புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை தான் விரும்பவில்லையென்றும் விளக்கமளித்தார். இதனால் அஜீத்தை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சி தோல்வியடைந்துவிட்டதாகவும், தமிழிசைக்கு அஜீத் பதிலடி கொடுத்திருக்கிறார் எனவும் பலர் கூறி வந்தனர்.

இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அஜீத் வெளியிட்டிருக்கும் அறிக்கை பாஜகவுக்கு பதிலடி இல்லை. அறிக்கை மூலம் பாஜகவுக்கு அவர் பதில்தான் கொடுத்திருக்கிறார்.  அஜீத்தை பாஜகவுக்கு அழைக்கவில்லை. பிற நடிகர்களை போல் அரசியலுக்கு வருவேனா மாட்டேனா என குழப்பாமல் அவரது அறிக்கை பிரமாதமாக தெளிவாக இருக்கிறது என்றார்.