அசுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த வழிபட்டு சுகம் பெற வேண்டிய கோயில்கள்

 

அசுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த வழிபட்டு சுகம் பெற வேண்டிய கோயில்கள்

திருத்துறைப்பூண்டி பிறவி ஶ்ரீமருந்தீஸ்வரர் கோயில்

அசுவினி:

tem

கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி ஶ்ரீமருந்தீஸ்வரர் கோயில்
அம்மன்: ஶ்ரீபெரியநாயகி
தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவிமருந்தீஸ்வரரை வணங்கி கணவன், சிறுவனை உயிர்ப்பித்தாள்.
சிறப்பு: நோய்களுக்கு நிவாரணம் தரும் அசுவினி நட்சத்திர தேவதையும், மருத்துவ தேவதைகளும் இங்கு வழிபடுவதாக ஐதீகம். அசுவினி நட்சத்திர நாளில் இங்கு தன்வந்திரி ஹோமம் செய்தால் ஆரோக்கியம் நிலைக்கும். 
இருப்பிடம்: திருவாரூரிலிருந்து 30 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 6-11, மாலை4- இரவு 8.

பரணி:

agni

கோயில்: நல்லாடை ஶ்ரீஅக்னீஸ்வரர் கோயில்
அம்மன்: ஶ்ரீசுந்தரநாயகி 
தல வரலாறு: இத்தலத்தில் மிருகண்ட மகரிஷி ஒரு யாகம் நடத்தினார். யாகத்தீயில் போட்ட பட்டு, சிவனை சென்று சேர்வது குறித்து சிலருக்கு சந்தேகம் எழுந்தது. கருவறைக்குச் சென்று காணும்படி மகரிஷி கூற, சிவன் மீது பட்டாடையைக் கண்டனர். பரணி என்ற அக்னி இருப்பதாகவும், அதுவே யாகப்பொருட்களை சிவனிடம் சேர்ப்பதாகவும் மகரிஷி விளக்கினார். இதனால் இது பரணித்தலமானது. 
சிறப்பு: பரணி நட்சத்திரத்தினர் ஹோமம் நடத்தலாம். கார்த்திகை மாத பரணி மிகவும் சிறப்பு. மேற்கு நோக்கி சுவாமி இருப்பதால் சக்தி அதிகம். 
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து, நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கி.மீ., தூரத்தில் நல்லாடை. 
திறக்கும் நேரம்: காலை 8- மதியம்12, மாலை 5- இரவு 8.30.

கார்த்திகை:

tem

கோயில்: கஞ்சாநகரம் ஶ்ரீகாத்ர சுந்தரேஸ்வரர்
அம்மன்: ஶ்ரீதுங்கபால ஸ்தனாம்பிகை
தல வரலாறு: தேவர்கள், பத்மாசுரனிடம் இருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அப்போது, சிவன் இங்கு நெருப்பு வடிவில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். தவம் கலைந்த அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் பறந்தன. அதிலிருந்து கார்த்திகேயன் (முருகன்) அவதரித்தார். தீப்பொறி பொன்னிறமாக எழுந்ததால் “காஞ்சன நகரம்’ எனப்பட்டது. அதுவே “கஞ்சாநகரம்'(பொன்நகரம்) என்றாகிவிட்டது. 
சிறப்பு: கார்த்திகையில் பிறந்தவர்கள் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாளில் தீபமேற்றி வழிபட வாழ்வு வளம் பெறும். கார்த்திகையில் பிறந்த கன்னிப்பெண்கள் அம்மனை வழிபட விரைவில் திருமணயோகம் கைகூடும்.
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் 8 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை10- 11, மாலை 4-5.

ரோகிணி:

temp

கோயில்: காஞ்சிபுரம் ஶ்ரீபாண்டவதூதப் பெருமாள் கோயில்
தல வரலாறு: வைசம்பாயனர் ரிஷியிடம், ஜன்மேஜய மகாராஜா, மகாபாரதக் கதை கேட்டார். கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் பற்றிக் கேட்ட போது, மன்னருக்கும் அந்த தரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் உண்டானது. ரிஷியின் வழிகாட்டுதல்படி காஞ்சிபுரத்தில் தவம் செய்து தரிசனம் பெற்றார். அவரே பாண்டவதூதப்பெருமாளாக கோயில் கொண்டிருக்கிறார்.
சிறப்பு: ரோகிணிதேவி, இத்தல பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். ரோகிணி நட்சத்திரத்தினர் புதன், சனிக்கிழமை, அஷ்டமிதிதி, 8ம் தேதிகளில் வழிபடுவது சிறப்பு. 
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ.,. ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரிலுள்ள சாலை.
திறக்கும்நேரம்: காலை 7- 11, மாலை 4- இரவு 7.30.

மிருகசீரிஷம்:

temp

கோயில்: எண்கண் ஶ்ரீஆதிநாராயணப் பெருமாள் கோயில்
தல வரலாறு: பெருமாளை நோக்கி தவமிருந்த பிருகுமுனிவர், சிங்க வேட்டைக்கு வந்த சோழனின் ஆரவாரத்தால் தவம் கலைந்து எழுந்தார். கோபத்தில் அவனை சிங்கமுகத்தோடு பிறக்க சாபமிட்டார். விருத்தகாவிரி என்னும் வெற்றாற்றில் நீராடி, எண்கண் பெருமாளை வணங்கி மீண்டும் மனிதமுகத்தைப் பெற்றான். 
சிறப்பு: மிருகசீரிட நட்சத்திரத்தினர், மிருகசீரிட நாளில் இங்கு வந்து வழிபட்டால் வாழ்வில் பிரச்னை நீங்கி சந்தோஷம் கூடும். 
இருப்பிடம்: தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் 50கி.மீ., தூரத்தில் முகூந்தனூர். அங்கிருந்து 1கி.மீ., தூரத்தில் எண்கண்.
திறக்கும்நேரம்: மாலை5- இரவு 7.

திருவாதிரை:

sundranayagi

கோயில்: அதிராம்பட்டினம் ஶ்ரீஅபயவரதீஸ்வரர்கோயில்
அம்மன்: ஶ்ரீசுந்தரநாயகி அம்மன்
தலவரலாறு: அசுரர்களுக்கு அஞ்சிய தேவர்கள், திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் அடைந்து சிவனருள் பெற்றனர். அபயம் அளித்தவர் என்பதால், சிவனுக்கு “அபயவரதீஸ்வரர்’ என பெயர் வந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ரைவத மகரிஷி, பைரவ மகரிஷி ஆகியோர் அருவநிலையில் இக்கோயில் சிவனை வழிபடுவதாக ஐதீகம். 
சிறப்பு: திருவாதிரை நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் தீர்க்காயுள், தைரியம் கிடைக்கும். அதீவீரராம பாண்டியர் திருப்பணி செய்ததால், இத்தலம் “அதிவீரராமன்பட்டினம்’ என வழங்கியது. தற்போது அதிராம்பட்டினமாகி விட்டது. 
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை 70கி.மீ., அங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் அதிராம்பட்டினம்.
திறக்கும்நேரம்: காலை 6.30- 12, மாலை4- இரவு 8.30.