அசுர வளர்ச்சி காணும் ஜியோ… ஒரே மாதத்தில் 82 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்….

 

அசுர வளர்ச்சி காணும் ஜியோ… ஒரே மாதத்தில் 82 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்….

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் ஜியோ நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் புதிதாக 82 லட்சம் இணைப்புகளை வழங்கியுள்ளது.

2016ல் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ நிறுவனம் காலடி வைத்தது. அந்த ஆண்டுதான் இந்திய தொலைத்தொடர்பு துறையின் வரலாற்றை மாற்றி அமைத்தது. ஜியோ நிறுவனம் தனது இலவச கால்கள், இன்டர்நெட் போன்ற அதிரடி சலுகைகளால் குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான மொபைல் வாடிக்கையாளர்களை பெற்றது. ஜியோவை சமாளிக்க முடியாமல் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது கடையை மூடி விட்டன.

ஏர்டெல்

தற்போது, ஏர்டெல், வோடாபோன் ஐடியா, பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஜியோவை சமாளித்து காலத்தை தள்ளிவருகின்றன. ஆனாலும், ஜியோவின் குறைந்த கட்டண திட்டங்களால் அந்த நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை இழந்து வருவதாக தெரிகிறது. நாளுக்கு நாள் ஜியோவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

வோடாபோன் ஐடியா

கடந்த ஜூன் மாதத்தில், ஜியோ நிறுவனம் புதிதாக 82 லட்சம் இணைப்புகளை வழங்கியுள்ளது. அதேசமயம் ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் மொத்தம் 41.7 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.