அசாம் விஷசாராய வழக்கு; முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது!

 

அசாம் விஷசாராய வழக்கு; முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது!

அசாம் மாநிலத்தில் விஷ சாராயம் அருந்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தில் தொடர்புடையதாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் விஷ சாராயம் அருந்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தில் தொடர்புடையதாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தின் உள்ள கோல்ஹாட் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த தேயிலை தொழிலாளர்கள், திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு பின்னர் இணைந்து சாராயம் குடித்துள்ளனர். இதையடுத்து, அன்றைய தினம், நள்ளிரவிலேயே பெண்கள் உள்பட ஏராளமானோருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. சிலர் ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.

தொடர்ந்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்ந்தன. தற்போது வரை உயிரிழப்பு எண்ணிக்கை 158-ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசாம் முதல்வரும் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக கலால்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் என இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து ஜோர்ஹாட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வைபவ் நிம்பல்கர் கூறுகையில், ஜித்து சோனாவால், சுனில் பருஹ் ஆகிய இருவர் பாக்ஸா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை தேடி வருகிறோம். கடந்த 1-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஜோர்ஹாட் மாவட்டத்தில் மட்டும் 2,41,000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே, அசாமில் விஷ சாராயம் அருந்தி ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து நான்கு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அம்மாநில தலைமை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.