அக்.24 ல் ஐப்பசி பௌர்ணமி: கல்வி மற்றும் கலையில் தேர்ச்சி பெற உதவும் அன்னாபிஷேக வழிபாடு  

 

அக்.24 ல் ஐப்பசி பௌர்ணமி: கல்வி மற்றும் கலையில் தேர்ச்சி பெற உதவும் அன்னாபிஷேக வழிபாடு  

தானங்களில் போதும் என்ற மனதிருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியில் அபிசேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படுகிறது.

ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதம் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தை, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு அபிசேகம் செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது.

annabisekam

வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ஆகும்.

கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிற்கும் உள்ளுணர்வே தரும் தயாபரன் சிவன். அந்த லிங்கத் திருமேனிக்கு ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் உலகமெங்கும் நடைபெறும்.

கோவில்களிலும், இல்லங்களிலும் லிங்கத் திருமேனி மூழ்கும் வண்ணம் சூடாறிய வெள்ளை அன்னத்தைக் கொட்டி மூடி, வெந்த காய்கறிகள், பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றை அடுக்கி லிங்க முகத்தையும் அழகுபடுத்துவார்கள்.

annabisekam

ஒவ்வொரு அன்னப் பருக்கையும் சிவரூபமாக இருப்பதாகப் பேரூர் புராணம் தெரிவிக்கிறது. எனவே இந்த அன்னாபிஷேக சிவனை ஒரு முறை தரிசித்தால் கோடி சிவ தரிசனம் செய்த பலன் ஏற்படும் என்பது ஐதீகம்.

இந்த அன்னச் சிவரூபத்திற்கு தீபாராதனை காண்பித்த பின்னர்,சிவன் மேல் பூசிய அன்னம் பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்கப்படும். வெள்ளை அன்னம் சாப்பிடக் கூடாது என்பதால், இந்த அன்னப் பிரசாதம், சாம்பார், தயிர், மோர் ஆகியவற்றுடன் தனித்தனியே கலக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.

annabeisekalhj

அபிஷேகப் பிரியனான சிவனுக்குப் பல வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டாலும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி எழுபது வகையான அபிஷேகப் பொருட்களில் ஒன்று அன்னம்.அன்னத்தால் அபிஷேகம் செய்தால் சாம்ராஜ்யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில் மூலவராகச் சுமார் பதிமூன்று அடி உயரமும், அறுபத்து மூன்று அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லிலான மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தை முழ்கடிக்கும் அளவிற்குச் சுமார் நூறு மூட்டை அரிசியில் அன்னம் செய்து, அதனை அன்னாபிஷேகமாகச் செய்வது வழக்கம்.

இந்த அபிஷேக அன்னத்தில் பாதி பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். மீதி நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக்கப்படும்.
 

annabeisekam

சிதம்பரம் ஸ்ரீ ஆதி மூலநாதர் சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் மேற்கண்ட முறையில் விசேஷ அபிஷேகம் நடைபெறும்.

மண்ணில் வாழ்ந்த சிவ வடிவாகவே கருதப்படும் காஞ்சி மஹா பெரியவரின் அருளாணையின் படி, பல்வேறு சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது.அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது.