அக்டோபரில் சென்னை – ஜப்பான் இடையே விமான சேவை!!

 

அக்டோபரில் சென்னை – ஜப்பான் இடையே விமான சேவை!!

சென்னையில் இருந்து ஜப்பானுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படும் என இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய ஜப்பான் தூதர் கென்ஜி தெரிவித்துள்ளார்

சென்னை: சென்னையில் இருந்து ஜப்பானுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படும் என இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய ஜப்பான் தூதர் கென்ஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், மூத்த அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். இரண்டு நாள்கள் நடைபெறும் மாநாட்டின் மூலம் ரூ.2.55 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மாநாட்டில் பேசிய ஜப்பான் தூதர் கென்ஜி, சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு வருகிற அக்டோபர் மாதம் முதல் ஜப்பான் ஏர்லைன்ஸ் மூலம் விமான சேவை தொடங்கப்படும். இதன் மூலம் சென்னைக்கும் ஜப்பானுக்கும் நேரடி தொடர்பு ஏற்படும் என்றார்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்க ஜப்பான் அரசு ஆதரவளிக்கும் என தெரிவித்த கென்ஜி, மெட்ரோ இரண்டாவது திட்டத்திற்கும் ஜப்பான் நிதியுதவி அளிக்கும். புதிய வெளிவட்ட சாலை திட்டங்களிலும் ஜப்பான் ஈடுபடுகிறது என்றார்.