அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்: இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு அமலாக்க துறை காவல்

 

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்: இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு அமலாக்க துறை காவல்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கிறிஸ்டியன் மைக்கேலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது

டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கிறிஸ்டியன் மைக்கேலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது ஆட்சி காலத்தின் போது, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட விவிஐபி-க்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.3,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், இதில், இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், துபாயில் கைது செய்யப்பட்டு இம்மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து, இந்த காவல் 9 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், கிறிஸ்டியன் மைக்கேலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரிய நிலையில், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் ஜாமின் கோரிய கிறிஸ்டியன் மைக்கேலின் மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.