ஃபானியை பார்க்க ஹெலிகாப்டரில் போன பிரதமர் மோடி; கஜா-ன்னா தொக்கா?-நெட்டீசன்கள் விளாசல்!

 

ஃபானியை பார்க்க ஹெலிகாப்டரில் போன பிரதமர் மோடி; கஜா-ன்னா தொக்கா?-நெட்டீசன்கள் விளாசல்!

புயல் கரையை கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. அதனால், ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன

புவனேஸ்வர்: கஜா புயல் பாதிப்பின் போது தமிழகம் வராத பிரதமர் மோடி, ஓடிசாவை மட்டும் பார்வையிட்டது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஃபானி, தமிழகத்தை தாக்கும் என எதிர்பார்த்த போது, அது ஓடிசாவை நோக்கி திசை மாறி சென்று, கடந்த வெள்ளிக்கிழமையன்று புரி கடற்கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. அதனால், ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. சூறைக் காற்றில் சிக்கி, மரங்கள் வேரோடு சாய்ந்தன. தொலைத் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்து, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

fani

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒடிசாவின் 14 மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 11.5 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும், புயலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

fani

புயல் கரையை கடந்தாலும் அது ஏற்படுத்திச் சென்ற பாதிப்பில் இருந்து இன்னும் ஒடிசா மீளவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தும், அத்தியாவசிய தேவைகளுக்கும் தவித்து வருகின்றனர். புயல் பாதித்த பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

புயல் பாதிப்பை முன்னதாக கணித்த மத்திய அரசு, ஒடிசா, ஆந்திரா, மேற்குவங்கம், தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு புயல் தாக்குதலுக்கு முன்னதாகவே ரூ.1,000 கோடி ஒதுக்கியிருந்தது. தமிழக அரசு சார்பில் ஒடிசாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்தில், ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். அவருடன் அம்மாநில முதல்வர், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, புயல் பாதிப்பின் உத்தேச சேத மதிப்பீடு, தேவைப்படும் நிதி உள்ளிட்டவைகள் குறித்து அம்மாநில முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, கஜா புயல் பாதிப்பின் போது பிரதமர் மோடி தமிழகத்தில் பார்வையிடாததை சுட்டிக் காட்டி பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது, அந்த பகுதிகளை பிரதமர் ஆய்வு செய்வது சரியே. எனினும், தமிழகம் அத்தகைய இடருக்கு உள்ளான போது இங்கு வராமல், தேர்தலை மனதில் வைத்து ஒருதலைப் பட்சமாக ஒடிசாவில் மட்டும் பிரதமர் மோடி ஆய்வு செய்வது குறித்து நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு விமர்சித்து வருகின்றனர்.

gaja

கஜா புயலானது, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை கடுமையான சேதத்துக்கு உள்ளாகிச் சென்றது. புயலால் 12 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதுதவிர, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.