வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் உங்களது மனம் கவர்ந்தவர் யார் என்பதற்கு இசைஞானி இளையராஜா சுவாரஸ்யமான பதிலை பகிர்ந்துள்ளார்.
சென்னை: வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் உங்களது மனம் கவர்ந்தவர் யார் என்பதற்கு இசைஞானி இளையராஜா சுவாரஸ்யமான பதிலை பகிர்ந்துள்ளார்.
சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியில், இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், மாணவிகளிடையே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். பின்னர் திரைப்படங்களுக்கு எப்படி இசை அமைப்பது என்பது குறித்தும் இளையராஜா விளக்கமளித்துள்ளார். இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடிய மாணவிகள், வயலீன், கீபோர்ட் மூலம் இசைத்து காட்டினர்.
இதைத் தொடர்ந்து ‘எத்தினிக் டே’ என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாணவிகளுடன் உரையாடிய இளையராஜா சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். இதில் தனது பாடல்கள் செவிகளோடு மட்டும் நிற்காமல் இதயத்திலும் இடம்பெறும். வானம் தான் எல்லை என பறவை போல் எண்ணிக் கொண்டு நம்பிகையுடன் செயல்பட வேண்டும் என்று மாணவிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அப்போது வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் உங்களது மனம் கவர்ந்த இசையமைப்பாளர் யார் என மாணிவிகள் கேட்க, அதற்கு பதிலளித்த இளையராஜா, தனக்கு தெரியாத ஒன்று இன்னொருவர் பாடல் மூலம் பிரதிபலிக்க வேண்டும், அப்படி எதுவும் வராத போது மற்ற பாடல்களை எப்படி ரசிக்க முடியும் எனக் குறிப்பிட்டு நிகழ்ச்சியை முடித்தார். இளையராஜாவின் இந்த பதில் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.