இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இதுதவிர ஊரடங்கால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் பலர் மதுபானம் இல்லாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் கள்ளச்சாராயம் தயாரித்தல்,மாற்று போதை பொருட்களை குடிப்பது, மதுப்பானங்களை கள்ளச்சந்தையில் விற்பது என பல குற்றச்சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் எலைட் டாஸ்மாக் கடையில் வெளிநாட்டு சரக்குகள் உள்ளன. ஊரடங்கு காரணத்தால் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும் என்று செல்போன் எண்ணுடன் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரமானது வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற இணையதளத்தில்வேகமாக பரவியது.
அதில் தொடர்புகொண்டு பேசிய போது, “சென்னை அண்ணா நகர் எலைட் டாஸ்மாக் கடையில் இருந்து பேசுவதாகவும் உங்களுக்கு தேவையான மதுபானங்களை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கிறோம். பில் தொகையில் பாதி பணத்தை மட்டும் ஆன்லைனில் செலுத்த வேண்டும். மீதி தொகையை வீட்டுக்கு வந்து மதுபானம் கொடுக்கும் நபரிடம் கொடுத்தால் போதும்” எனக் கூறியுள்ளனர்.
இதை நம்பிய பலர் ஆயிரக்கணக்கில் பணத்தை ஆன்லைனில் செலுத்த சில மணிநேரத்தில் அந்த செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. இதையடுத்தே தாங்கள் ஏமாற்றபட்டது பணம் செலுத்திய மதுப்பிரியர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து புகார் கொடுக்காமல் தெரிந்த போலீஸ் நண்பர்களுக்கு மட்டும் தகவலை சொல்ல செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், அது ஒடிசாவிலிருந்து பேசியது கண்டுபிடிக்கபட்டது. இருப்பினும் இதுகுறித்து புகார்கள் கொடுக்கப்படவில்லை.