பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை: பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட்டில் துவங்கிய #MeToo எழுச்சியை தொடர்ந்து, உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சக்திவாய்ந்த ஆண்கள், ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். இந்திய சினிமாவிலும், ஸ்ரீ ரெட்டி, தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட நடிகைகள், தங்களிடம் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்றுள்ள பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அப்பெண் தன்னிடம் கூறிய தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர் சந்தியா மேனன் என்பவர் பதிவிட்டுள்ளார்.
On lyricist Vairamuthu pic.twitter.com/c6DwYWOO6C
— Sandhya Menon (@TheRestlessQuil) October 8, 2018
பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக டிவிட்டரில் சந்தியா மேனன் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு 18 வயது இருக்கும்போது பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து, அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென தன்னை வைரமுத்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அதைத்தொடர்ந்து, நான் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் இருக்கும் அறையில் தனியாக இருக்கவே எனக்கு நடுக்கமாக இருக்கும். பணியின் காரணமாக அப்படி ஒரே அறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், எப்போதுமே நிறைய பேர் இருக்கும்போது மட்டுமே செல்வேன்.
வைரமுத்து பாலியல் ரீதியாக பெண்களை சீண்டுபவர் என்பது சினிமா உலகில் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அவருக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளை வைத்து பாதிக்கப்பட்டவர்களை அடக்கி விடுவதால், யாருமே அவரை எதிர்ப்பதில்லை. இது எனக்கு நடந்தது. அது தான் உண்மை. எனது பெயரை வெளியில் கூற நான் விரும்பவில்லை” இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.