படிக்கவில்லை என்று கூறி சிறுமியை தாய் அடித்ததால், அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: படிக்கவில்லை என்று கூறி சிறுமியை தாய் அடித்ததால், அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு நித்திய கமலா என்ற மனைவியும், லத்திகா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். நித்திய கமலா அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சிறுமி லத்திகா ஸ்ரீ விடுமுறை என்பதால் வீட்டிலிருந்து வந்துள்ளார். அப்போது தாய் நித்திய கமலா அவரை படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி படிக்காமல் டிவி பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நித்திய கமலா, சிறுமியை சரமாரியாக அடித்துள்ளார். இதில் சிறுமி லத்திகா மயக்கமடைந்தாக தெரிகிறது.
இதையடுத்து சிறுமியை அக்கம் பக்கத்தினர் துணையுடன், நாமக்கல் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளார் கமலா. ஆனால், சிறுமியின் நிலைமை மோசமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி லத்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாய் நித்திய கமலாவை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. படிக்காமல் டிவி பார்த்த காரணத்தால் தாயே மகளை அடித்துக் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.