திருமலைக்கு வரும் வி.ஐ.பி.க்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு ஐம்பது ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
இதனால் ஆலயத்திற்குள் கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன் நீண்ட நேரம் வரிசையில் நிற்கின்ற நிலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தள்ளப்படுகின்றனர்.
இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தற்போதைய தரிசன முறையில் ஒரு சில மாற்றங்கள் செய்ய தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனையடுத்து வி.ஐ.பி.க்களுக்கு அதிகாலை முதல் காலை, 10:00 மணிவரை மூன்று விதங்களில் தேவஸ்தானம், பிரேக் தரிசனம் வழங்கி வருகிறது. இந்த தரிசனம்,நிறுவனங்களின் தலைவர்கள் முக்கிய புள்ளிகள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.
இவற்றை கண்காணிக்க அவர்களுக்கென தனித்தனியாக மக்கள் தொடர்பு செயலர்கள் உள்ளனர். மேலும், வி.ஐ.பி.க்கள் தினசரி பிரேக் தரிசனத்திற்காக பரிந்துரை கடிதங்களும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் பரிந்துரை கடிதங்கள் வழங்குவது தற்போது அதிகரித்துள்ளதால் சாதாரண பக்தர்களுக்கு காலையில் 10:00 மணிக்கு மேல் மட்டுமே ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதனால் காத்திருப்பு அறையில் காத்திருக்கும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இலவச தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு விரைவில் தரிசனம் வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனை தொடர்ந்து திருமலைக்கு வரும் வி.ஐ.பி.க்களுக்கு தேவஸ்தானம் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் வழங்க அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு செய்வதால் வி.ஐ.பி.க்களின் எண்ணிக்கை குறைவதுடன் சாதாரண பக்தர்களுக்கு விரைவில் தரிசனம் அளிக்க முடியும் என்று தேவஸ்தானம் கருதுகிறது.
ஆனால் இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சம்மதிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வி.ஐ.பி.க்கள் தரிசன முறையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்று பெரும்பாலான தேவஸ்தான உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.