உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17லட்சத்து 94ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரு லட்சம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று 911பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 900க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், “கொரோனா அறிகுறியுடன் 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 162 பேர் அரசு முகாமிலும் உள்ளனர். 58,189 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. 10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது” எனக்கூறினார்.