தமிழகத்தில் ஊரடங்கை மீறிய 1,64,357பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறிய 1,64,357பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று கொரோனாவால் 913 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 969 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
மக்கள் ஊரடங்கை சரியாக கடைபிடித்து வந்தாலும் சிலர் தேவையின்றி வெளியே சுற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவ்வாறு அனாவசியமாக வெளியே சுற்றியவர்கள் ஊரடங்கை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் 1,64,357பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 1,52,520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தேவையின்றி வெளியே சுற்றியவர்களின் 1,29,705 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. ஊரடங்கை மீறி தவறு செய்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.61,29,744 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.