நெல்லை மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர், வடிவேல் மீம்ஸ்களின் மூலம் வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அறிவித்ததிலிருந்து, தமிழக போக்குவரத்து காவல்துறையினர் சாலைப் போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் துவங்கியுள்ளனர். நெல்லை மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர், வடிவேல் மீம்ஸ்களின் மூலம் வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த புதிய வகை முயற்சிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தருமபுரி மாவட்ட போக்குவரத்து காவல் துறை, ஹெல்மெட் அணியால் வந்த 85 பேரை நேற்று பிடித்து, சாலை போக்குவரத்து விதிமீறல்களில் காயமடைந்தோர் அனுமதிக்கப் பட்டிருக்கும் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று, காயமடைந்தவர்களின் வலிகளையும் அவர்கள் செய்த தவறினால் ஏற்பட்ட விபரீதத்தையும் அவர்களின் மூலமாகவே ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களுக்குத் தெரிவிக்க வைத்துள்ளனர். இதன் மூலம், சாலை விதிகளை மீறுபவர்களுக்குப் பின்விளைவுகள் புரிய வருவதோடு, அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள்.
வழக்கமாக விதி மீறல்கள் நடந்தால் அபராதம் செலுத்த வைத்து, சிறிது நேரம் காத்திருக்க வைத்து விட்டு அவர்களை அனுப்பி விடுவர். ஆனால், தற்போது ஏற்படுத்தப் பட்டு வரும் இந்த புதிய வகை விழிப்புணர்வுகளால் சாலை போக்குவரத்து விதி மீறல்களைக் குறைக்க முடியும் என்று இவ்வகையான முயற்சிகளைப் போக்குவரத்து காவல்துறையினர் செயல்படுத்தி வருகின்றனர்.