பாலியல் தொந்தரவு கொடுத்து வரும் தந்தையிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
புதுக்கோட்டை: பாலியல் தொந்தரவு கொடுத்து வரும் தந்தையிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவகத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வந்திருந்தார். இதை தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அவர் அளித்த அந்த புகாரில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-
‘ எனது தாயும் தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து விட்டனர். ஆதரவு இல்லாத காரணத்தால் நான் சென்னையில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தேன். கடந்த மார்ச் மூன்றாம் என்னை பார்க்க வந்த என் தந்தை, கோவில் திருவிழா என்று கூறி என்னை ஊருக்கு அழைத்து வந்து எனக்கு பாலியல் தொல்லை தந்தார். வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி அடைத்து வைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதையடுத்து வீட்டிலிருந்து தப்பித்த நான் இதுகுறித்து எனது சகோதரியிடம் தெரிவித்தேன்.
இதை கேட்ட என் சகோதரி, அதிர்ச்சியடைந்து சகோதரியின் உறவினர் ஒருவருடன் எனக்கு திருமணம் செய்து வைத்தார். அதன் பின்பும் எனது தந்தை, என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார். என் தந்தை என்னை போல் என் சகோதரிக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் எனது தந்தையிடமிருந்து பாதுகாக்க எனக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக இது குறித்து திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை இன்று அன்றாட செய்தியாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக உறவினர்களே வன்கொடுமையில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.