மொத்தத்தில் அமமுக கூடாரம் காலி என்பதோடு மட்டுமல்லாமல் மாவட்ட செயலாளர் பதவிக்கு ஆள் தேடும் நிலையில் உள்ளது.
டி.டி.வி.தினகரன் அமமுக என்ற தனிக்கட்சியை ஆரம்பித்த போது அவருக்கு செல்வாக்கு மிகுந்த மாவட்டமாக நெல்லை இருந்தது. இதனாலேயே நெல்லை மாவட்டத்திற்கு அடிக்கடி டி.டி.வி. தினகரன் ‘விசிட்” அடித்தார். 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தீர்ப்பு வந்த போது கூட அவர்களை குற்றாலத்தில் உள்ள இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான விடுதியில் பாதுகாப்பாக தங்க வைத்தார்.
கூட்டுறவு தேர்தல் நடந்தபோது நெல்லை மாநகரில் அனைத்து பதவிகளையும் அமமுக கைப்பற்றி ஆளும் கட்சிக்கு கடும் அதிர்ச்சி கொடுத்தது. அமமுகவின் தேர்தல் வியூகத்தின் முன்பு ஆளுங்கட்சியினர் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. அக்ரோ தலைவர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த பலம் வாய்ந்தவர் போட்டியிட்ட போதிலும் அமமுக சாதாரண நபரை தேர்தலில் நிறுத்தி சாதித்தது. ஆனால் மக்களவை தேர்தலுக்கு பிறகு எல்லாம் தலைகீழாகி விட்டது. நெல்லையில் 3 மாவட்ட செயலாளர்கள் அமமுகவிற்கு இருந்த நிலையில் ஒருவர் பின் ஒருவராக கழன்று கொண்டனர்.
பாப்புலர் முத்தையா, ஆனந்தன் போன்றவர்களும் விலகி சென்றனர். மொத்தத்தில் அமமுக கூடாரம் காலி என்பதோடு மட்டுமல்லாமல் மாவட்ட செயலாளர் பதவிக்கு ஆள் தேடும் நிலையில் உள்ளது. இதுவரை டி.டி.வி.தினகரன் அதிமுகவில் தனக்கு ஸ்லீப்பர் செல் இருப்பதாக கூறி வந்தார். ஆனால் அதெல்லாம் புஸ்வானம் என அவரால் நீக்கப்பட்ட மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம் உண்மையை புட்டுப் புட்டு வைத்துள்ளார்.