2011ல் சி.பி.ஐ.யின் தலைமை கட்டிட திறப்பு விழாவில், முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட ப.சிதம்பரம் நேற்று இரவு அதே கட்டிடத்தில் காவலில் வைக்கப்பட்டார்.
டெல்லியில் லேதா சாலையில் சி.பி.ஐ.யின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடத்தை 2011 ஏப்ரல் 30ம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். அந்த விழாவில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அன்று அவருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ராஜமரியாதை கொடுத்தனர். ஆனால் இன்று அவரது நிலைமை தலைகீழாக மாறி விட்டது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு முழுவதும் சி.பி.ஐ.யின் தலைமை அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டார். எந்த கட்டிட திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாரோ அதே கட்டிடத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபராக நேற்று இரவு முழுவதும் பொழுதை கழித்தார்.
இன்னும் சற்று நேரத்தில் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ப. சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர். தொடர்ந்து அவர் சி.பி.ஐ. காவலில் வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.